பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் தொழில் நகரமான திருப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக வளர்க்கப்படும் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
தைப் பொங்கல் திருநாள் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உலக பிரசித்தி பெற்ற மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
]அதற்கான முன்பதிவு நிறைவடைந்த நிலையில் இதில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாடுபிடி வீரர்களும், காளை வளர்ப்பாளர்களும் பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் வளர்க்கப்படும் காளைகளுக்கு திருப்பூர் மாநகரம், கோவில் வழி, நெருப்பெரிச்சல் பகுதிகளில் தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இங்கு கம்பீரத்திற்கு பெயர்பெற்ற காங்கேயம் காளைகள், ஆக்ரோஷத்திற்குப் பெயர் போன புலிக்குளம் காளைகள், பிடிபடாத வேகம் கொண்ட தேனி மலை மாடுகள், வலிமையான ஜெயங்கொண்டம் மற்றும் கருமை நிறத்தில் மிரட்டும் காரி காளைகள் எனப் பல ரக நாட்டின காளைகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதிகாலையிலேயே காளைகளுக்கான பயிற்சிகள் இங்கு தொடங்கி விடுகின்றன. காளைகளின் திமிலை வலுப்படுத்தவும், கொம்புகளை கூர்மையாக்கவும் மண் குத்துதல் பயிற்சி, காளைகளின் உடல் திறனை மேம்படுத்த குளங்களில் நீச்சல் பயிற்சி மற்றும் மூச்சுப் பிடித்து ஓட நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
இந்த பயிற்சியில் ஈடுபடும் காளைகளுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் உணவுகளோடு பச்சரிசி மாவு, பேரீச்சம் பழம் மற்றும் முட்டை உள்ளிட்ட சத்தான உணவுகளும் வழங்கப்படுகின்றன.
காளைகளுக்கு உணவளிப்பது மட்டுமின்றி அவற்றை அன்புடன் பராமரிக்கிறார் மாடு பிடி வீரரான பாக்யராஜ் என்பவரின் மனைவி ஸ்நேகா. மற்றவரை கண்டால் முரண்டு பிடிக்கும் ஜல்லிக்கட்டு காளைகள் இவரை கண்டால் குழந்தையை போல் சொல்படி கேட்கிறது. தான் வளர்க்கும் காளைகள் போட்டியில் பரிசினை வென்று வரும் போது தங்கள் வீட்டு பிள்ளைகள் வென்றது போல் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு திருப்பூரில் இருந்து 20-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து செல்லப்படுவதாக காளை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர். காளைகளை தங்களில் ஒருவராக பார்த்து வளர்த்து வருவதாகவும், காளைகள் மட்டுமின்றி மாடு பிடி வீரர்களும் பயிற்சி பெற்று வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
போட்டியில் பங்கேற்பதற்கு ஆன்லைன் பதிவு முறையாக நடத்தவில்லை என்றும் அதை தமிழக அரசு முறைப்படுத்திட வேண்டும் என்ற காளை வளர்ப்போர் கோரிக்கை விடுக்கின்றனர்.
பொங்கல் திருநாளையொட்டி அனைவரும் எதிர்பார்க்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலை அலங்கரிக்க காளைகள் தயாராகி வருகின்றன. இது ஒரு புறமிருக்க அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கின்றனர் காளை உரிமையாளர்கள். இவற்றை எல்லாம் அரசு நிறைவேற்றுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
















