சென்னை ஐஐடி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டார்.
சென்னை ஐஐடி வளாகத்தில், ஐஐடி மெட்ராஸ், முத்தமிழ் மன்றம் மற்றும் ஊழியர் மன்றம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஐஐடி இயக்குனர் காமகோடி, ஐஐடி மெட்ராஸ் பணியாளர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வேட்டி சட்டை அணிந்து பொங்கல் விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, பொய்க்கால் குதிரை ஆட்டம், பம்பை வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐஐடி குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்,அனைவருக்கும் வணக்கம், இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என தமிழில் பேசினார்.
நமது நாட்டில் பல்வேறு தரப்பினர் பொங்கல் பண்டிகையை பல விதமாக கொண்டாடி வருவதாக கூறிய அவர், தாம் இதுவரை பொங்கல் பண்டிகையை கொண்டாடியது கிடையாது என தெரிவித்தார்.
மேலும், தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் தர்மேந்திர பிரதான் கூறினார்.
முன்னதாக பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, ஐஐடி வரலாற்றில் மத்திய அமைச்சர் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்பது இதுவே முதல்முறை எனக் கூறினார்.
நமது தேசம் இயற்கை விவசாயத்தின் நிலைத்தன்மைக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், உழவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் உலகிற்கே வந்துள்ளதாகவும் காமகோடி கூறினார்.
















