பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு ஆதரவாக செயல்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில், தலைமைக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே தற்போது கடும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
1980-களின் இறுதியில் ஹஃபீஸ் சயீது உள்ளிட்டவர்களால் தொடங்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஒரு பயங்கரவாத அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளால் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பு, இஸ்லாமிய தீவிரவாத சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அத்துடன் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் இந்த அமைப்புக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசுக்கும், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கும் நம்பகமான பிரதிநிதியாக செயல்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பாவில், தற்போது கடும் கருத்து மோதல்கள் நிலவி வருவதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை எந்த எதிர்ப்புமின்றி அந்நாட்டு ராணுவத்தின் கட்டளைகளை நிறைவேற்றி வந்த இந்த அமைப்பில், தற்போது வெளிப்படையான அதிருப்தி தலைதூக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், சமீப காலத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள், லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமைக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்தியா நடத்திய ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பின், லஷ்கர் அமைப்பு பெருமளவிலான தளங்களையும், வசதிகளையும் இழந்தது. அதன் பிறகு மீண்டும் வலுப்பெற முடியாமல் அந்த அமைப்பு தவித்து வரும் நிலையில், தங்களை பாதுகாக்கும் கடமையில் பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ அமைப்பும் தோல்வியடைந்து விட்டதாக லஷ்கர் அமைப்பினர் நம்பத் தொடங்கியுள்ளனர்.
அதில் மேலோங்கிய எதிர்ப்பு குரல்களை தற்காலிகமாக சமாளிக்க ஐ.எஸ்.ஐ. முயன்றாலும், தாலிபான், தெஹ்ரீக்-ஏ-தாலிபான், பலுச்சிஸ்தான் நேஷனலிஸ்ட் ஆர்மி போன்ற அமைப்புகளுக்கு எதிராக, லஷ்கர்-இ-தொய்பாவை பயன்படுத்திய பாகிஸ்தான் ராணுவத்தின் முடிவு, கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. பலுச்சிஸ்தானில் உள்ள அரிய கனிம வளங்கள் மீது சீனா மற்றும் மேற்கத்திய நாடுகள் கொண்டுள்ள ஆர்வத்திற்காக, பாகிஸ்தான் ராணுவம் தங்களை சொந்த மக்களுக்கு எதிராக போரிட வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு லஷ்கர் உறுப்பினர்களிடையே எழுந்துள்ளது.
மற்றொருபுறம், TTP மற்றும் BLA போன்ற அமைப்புகளை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால் ஐ.எஸ்.கே.பி-யை லஷ்கர்-இ-தொய்பாவுடன் இணைத்த முடிவு, அந்த அமைப்புக்குள் ஏற்கனவே இருந்த கிளர்ச்சி மனநிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஆப்கானில் உள்ள தாலிபானுக்கு ஆதரவளித்து வந்த லஷ்கர் அமைப்புக்கு, அவர்களின் முக்கிய எதிரியான ஐ.எஸ்.கே.பி.யுடன் கூட்டணி அமைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனிடையே, ஆப்கானிஸ்தானில் தாலிபானை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், லஷ்கர் தலைமையின் அதிருப்தியை அதிகரிக்கும் மற்றொரு காரணமாக மாறியுள்ளது.
முன்பு மறைமுகமாக இருந்த இந்த கருத்து வேறுபாடுகள், தற்போது வெளிப்படையாக தெரியத் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் வெளிப்பாடாக லஷ்கர் தளபதி முகம்மது அஷ்ஃபக் ராணா வெளியிட்ட வீடியோ, பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பிரதமர் ஷெபாஸ் ஷ்ரீஃப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் தங்களை பயன்படுத்திக் கொண்டதாகவும், நாட்டை கடனில் மூழ்கடித்து விட்டதாகவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
இதற்கிடையே, லஷ்கர் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஹஃபீஸ் சயீத் நீண்ட காலமாக பொதுவெளியில் தோன்றாமல் இருப்பதும், லஷ்கர் அமைப்பில் நிலவும் குழப்பங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், லஷ்கர்-இ-தொய்பா கட்டுப்பாடுகளை மீறி செயல்பட தொடங்கும் பட்சத்தில், அது பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி முழு பிராந்தியத்திற்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறும் என பாதுகாப்புத்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதேபோன்ற பிளவுகள் ஜெய்ஷ்-இ-முகம்மது போன்ற அமைப்புகளிலும் ஏற்பட்டால், பாகிஸ்தான் அரசு கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
















