ஜம்மு காஷ்மீரின் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கின் மீதான தனது உரிமையை மீண்டும் வலியுறுத்திய சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு
ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு என்பது Karakoram காரகோரம் மலைத்தொடரின் வடக்கே அமைந்துள்ள ஒரு தொலைதூர, உயரமான பள்ளத்தாக்கு ஆகும்.
இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (Gilgit-Baltistan) கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதிக்கும் (Siachen/Aksai Chin) சியாச்சின்-அக்சாய் சின் பகுதிக்கும் அருகில் அமைந்துள்ளது.
தற்போது இது சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தின் ஒரு பகுதியாக சீனாவால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்திய விடுதலைக்கு முன், ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு முன்னாள் ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1947-ல் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக சட்டப்பூர்வமாக இணைக்கப்பட்ட ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு உரிமை உடையதாக உள்ளது.
பிரிவினைக்குப் பிறகு சுதந்திரம் அடைந்த உடனேயே நடந்த இந்திய- பாகிஸ்தான் போரில், ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டது.
அதன் பிறகு 1963-ல் சீனாவுடன் பாகிஸ்தான் ஒரு எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம், தனக்கு உரிமை இல்லாத ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்குப் பகுதியை சட்ட விரோதமாக பாகிஸ்தான் சீனாவிடம் ஒப்படைத்தது.
1963 ஆம் ஆண்டு, சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தை அங்கீகரிக்காத இந்தியா, அதை சட்ட விரோதமானது என்றும் கூறியது.
மேலும், ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாகக் கருதும் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு பகுதியைப் பாகிஸ்தானால் சீனாவுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அழுத்தம் திருத்தமாக இந்தியா தெரிவித்தது.
காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகு எல்லை மறுபரிசீலனை செய்யப்படலாம் என்ற குறிப்பிட்ட நிலையில், இறுதித் தீர்வு அல்ல என்பதற்கு இதுவே ஆதாரம் என்று இந்தியா சுட்டிக் காட்டி, சீன- பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளது.
இதற்கிடையே, ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சீனா ஒரு நீண்டகால அனைத்துப் பருவ காலங்களுக்கும் ஏற்ற சாலையை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவின் எல்லைக்கு சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு பகுதியில், சுமார் 10 மீட்டர் அகலம் கொண்ட சாலையை சீனா கட்டிவருகிறது. சுமார் 75 கிலோமீட்டர் தூரத்துக்கான சாலையை ஏற்கெனவே சீனா கட்டி முடித்துவிட்டது.
சீனாவின் சின்ஜியாங்க் G219 நெடுஞ்சாலையில் இருந்து இந்தியாவின் வடகோடிப் புள்ளியான சியாச்சினில் உள்ள Indira Col, இந்திரா கோல் மலைப் பகுதிக்குள் செல்லும் வகையில் இந்த சாலை கட்டப் பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு, இந்த சாலை உள்கட்டமைப்பின் செயற்கைக்கோள் படங்களை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டிருந்தது. அப்போதே இந்தியா சீனாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது.
மேலும், இந்திய எல்லை வழியாகச் செல்வதால், சீனாவின் சாலை திட்டம் , சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் என்பதையும் இந்தியா அங்கீகரிக்கவில்லை.
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒரு பகுதி என்று வலியுறுத்தியுள்ளது.
ஏற்கெனவே சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்தான எல்லை ஒப்பந்தத்தைச் சுட்டிக் காட்டிய சீனா, ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்குத் தனக்குச் சொந்தமான பகுதி என்றும் அதனால் உள்கட்டமைப்பு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்றும் கூறிவருகிறது.
இந்நிலையில், சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் இரண்டாவது செயல் திட்டத்தைச் சீனா தொடங்கியுள்ளது.
ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சீனாவின் புதிய உள்கட்டமைப்பு சியாச்சினைச் சுற்றி பாதுகாப்புச் சிக்கலை உருவாக்கும் என்றும், இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவ நடவடிக்கைகளுக்கு இந்த வழித்தடம் பயன்படுத்தப்படலாம் என்றும் அஞ்சப் படுகிறது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒரு பகுதி என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் வருடாந்திர ஊடக சந்திப்பில் ராணுவத் தளபதி துவிவேதி, ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்குப் பகுதியில் சீனாவின் எந்தவொரு செயலும் இந்தியாவின் உரிமை மீறல் என்று தெரிவித்துள்ளார். மேலும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் 2.0 குறித்த சீனா மற்றும் பாகிஸ்தானின் கூட்டு அறிக்கையையும் இந்தியா ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
















