தமிழ் மொழியானது தகவல் தொடர்பும், கலாச்சார வலிமையும் கொண்ட செழுமையான மொழி என, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
துக்ளக் நாளிதழின் 56ஆவது ஆண்டு நிறைவு விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. விழாவில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 9 சதவீத பங்களிப்பை வழங்குவதாகவும், நாட்டின் முக்கிய பொருளாதார நுழைவாயிலாக திகழ்வதாகவும் கூறினார். மேலும், தமிழ் பாரம்பரியத்திற்கு பிரதமர் மோடி சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். தேசிய கல்விக்கொள்கையானது அரசியல் காரணங்களுக்காக அல்லாமல், எதிர்கால தலைமுறையின் வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், மும்மொழிகளை கற்பதால் தாய்மொழிக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது எனவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார்.
முன்னதாக விழாவில் பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன், திமுகவானது தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும், இந்துக்களுக்கும் எதிரி என குற்றம்சாட்டினார். மேலும், திமுகவை வீழ்த்தியே ஆக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் விழாவில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி, காங்கிரஸுக்கு யார் அமைச்சரவையில் 5 இடங்கள் தருகிறார்களோ அவர்கள்தான் ஆட்சியை பிடிப்பார்கள் என கூறினாா்.
















