வெனிசுலா அதிபரையும் அவர் மனைவியையும் அதிரடியாக கைது செய்து புரூக்ளின் சிறையில் அடைத்த அதிபர் ட்ரம்பின் நடவடிக்கை சீனாவுக்கு, அமெரிக்காவின் நேரடி எச்சரிக்கை என்று கூறப்படுகிறது
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லத்தின் அமெரிக்க நாடுகளில் தனது செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்தச் சீனா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
அர்ஜென்டினாவில் செயற்கைக்கோள் கண்காணிப்பு நிலையங்கள், பெருவில் துறைமுகம், வெனிசுலாவுக்கான பொருளாதார உதவிகள் எனச் சீனாவின் நடவடிக்கைகள், நீண்டகாலமாகவே அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வந்தன.
வெனிசுலாவிடம் மலிவான எண்ணெயைப் பெறுவதற்காகப் பெருங் கடனை வாரி வழங்கிய சீனாவின் செயல் திட்டங்கள் முடிவுக்கு வந்து விட்டன என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெனிசுலா தலைநகரில் சீனாவின் உயர்மட்ட அரசு அதிகாரிகள், அதிபரைச் சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்திய நாளில் தான் அமெரிக்கா, வெனிசுலா அதிபர் மதுரோவையும், அவர் மனைவியையும் கைது செய்தது.
இது எப்படி சீனாவின் உளவுத்துறைக்குத் தெரியாமல் போனதும், சீனா மற்றும் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புக்களை அமெரிக்கா செயலிழக்க வைத்ததும் சர்வதேச அளவில் விவாதப் பொருள் ஆகியுள்ளது.
சொல்லப்போனால், சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டுள்ள உலகின் எந்தவொரு நாடும் அச்சத்தில் உள்ளது. அமெரிக்காவின் தாக்குதல்களிலிருந்து தங்கள் நாடு உண்மையில் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பதை மறு ஆய்வு செய்து வருகின்றன.
இதற்கிடையே, சொந்த அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக, சீனாவின் பாதுகாப்பு அமைப்புகளில் என்ன தவறு நடந்தது என்பதை சீனாவும் ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான, சட்டவிரோத மற்றும் அச்சுறுத்தும் செயல்களை நிராகரிப்பதாக அமெரிக்காவின் உள்ள சீனத் தூதரகம் கண்டித்துள்ளது.
லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளும் நட்புறவான பரிமாற்றங்களையும் ஒத்துழைப்பையும் சீனா பேணி வரும் நிலையில், நிலைமை எப்படி மாறினாலும், அது தொடரும் என்று சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக, வெனிசுலாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்பில் சீனா மிக அதிக அளவில் முதலீடுகள் செய்துள்ளன. 2017ம் ஆண்டு, அமெரிக்காவின் பொருளாதார தடைக்குப் பிறகு இதுவே வெனிசுலாவின் உயிர் ஆதாரமாக இருந்தது. வெனிசுலாவின் பொறுப்பு அதிபர் என்று தன்னைப் பிரகடனம் செய்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனாவும், ரஷ்யாவும் எண்ணையை இனி அமெரிக்காவிடம் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், கியூபாவில் தனது செல்வாக்கை சீனா அதிகரித்துவரும் நிலையில், கியூபாவில் அமெரிக்க இராணுவத் தலையீடு அநேகமாகத் தேவையிருக்காது என்று கூறியுள்ள ட்ரம்ப், அந்நாடு தானாகவே வீழ்ச்சியடையத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பனாமா கால்வாய்க்கு அருகில் சீனாவின் செல்வாக்கும் இப்போது சிக்கலாகி உள்ளது. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் முக்கியமான நீர்வழி பாதையான பனாமா கால்வாயைச் சுற்றியுள்ள துறைமுகங்களிலிருந்து சீனாவை விலக்கி வைக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.
சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்திலிருந்து விலகுவது, C K Hutchison நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்ததத்திலிருந்து வெளியேறுவது எனப் பனாமா எடுக்கும் நடவடிக்கைகளை ட்ரம்ப் வரவேற்றுள்ளார்.
உலகின் மேற்கு அரைக் கோளத்தில், வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கைத் தடுத்து நிறுத்த முயன்று வெனிசுலாவில் சிக்கி உள்ள அமெரிக்கா, ஆசியா மண்டலத்தில் சீனாவின் செல்வாக்கை அமெரிக்கா மறந்து விடக் கூடாது என்றும் புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
















