காணும் பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை மெரினா கடற்கரைக்கு குடும்பம் குடும்பமாக வருகை தந்த மக்கள், உற்சாகமாக பொழுதை கழித்தனர். குதிரை சவாரி சென்றும், துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டில் ஈடுபட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
காணும் பொங்கலையொட்டி, கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள். கடலில் குளித்து குதூகலித்தனர். இதேபோல் திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலா தலத்தில் ஏராளமான மக்கள் உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடினர்.
நெல்லை கொக்கிர குளத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் மாவட்ட அறிவியல் மையத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வியப்புடன் பார்த்து ரசித்தனர். வேலூரை பொறுத்தவரையில் வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டையை சுற்றுலாப் பயணிகள் பிரமிப்புடன் பார்த்து வியந்தனர்.
இதேபோல், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணையில், இமயமலை போல் ஏற்படுத்தப்பட்டுள்ள வடிவமைப்பில் ஏறி பொதுமக்கள் உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் காலை முதலே சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
கொடைக்கானல் மன்னவனூர் ஏரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், இயற்கை அழகை மெய்மறந்து கண்டு ரசித்தனர். இதேபோல், சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானி சாகர் அணை பூங்காவிற்கு வருகை வந்த சுற்றுலா பயணிகள், அங்குள்ள மீன்கடைகளில் மீன்களை வாங்கி ருசித்தனர்.
















