தை அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னித்தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி, மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ஆண்டுதோறும் தை அமாவாசை நாளில், மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி இன்று தை அமாவாசை தினம் என்பதால், பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், புனித நீராடி, மறைந்த தங்களது முன்னோர்களுக்கு எள், பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
பின்னர் பக்தர்கள், ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் கோயில், கடற்கரை பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சதுரகிரியில் உள்ள சுந்த மகாலிங்க சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விருதுநகரில் உள்ள இந்த கோயிலில் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் தை மாத அமாவாசையை ஒட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.
தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் கரடு முரடான பாதையில் சென்ற பக்தர்கள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி என வனத்துறை உத்தரவிட்டிருந்த நிலையில் ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் வேகமாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை பகுதியில் தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி ஆயிரக்கணக்கானோர் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
சங்கமேஸ்வரர் கோயிலின் பரிகார மண்டபங்கள் மட்டுமன்றி, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பரிகார கூடங்களிலும் தங்களது மூதாதையருக்கு திதி, பித்ரு பூஜை, தர்ப்பணம் வழங்கி பொதுமக்கள் வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை குவிந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதேபோல் தை அமாவாசையை ஒட்டி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடினர். பின்னர் பக்தர்கள் தங்களது மறைந்த முன்னோர்கள நினைவாக வாழை இலையில்,பச்சரிசி , தேங்காய், காய்கறி உள்ளிட்டவை வைத்து வழிபட்டனர்.
தை அமாவாசை தினமான இன்று குற்றால அருவி கரையில் புனித நீராடி ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
தை அமாவாசை முன்னிட்டு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு பாபநாசம் ஆற்றின் கரையோரங்களில் தர்பணம் செய்து புனித நீராடி வாரிசுகள் வழிபட்டனர்.
















