ஈரானில் மக்கள் போராட்டத்தை அடக்க ஐந்தாயிரம் கூலிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. யார் அவர்கள்? எங்கிருந்து அவர்கள் வரவழைக்கப்பட்டனர்?
எங்கு பார்த்தாலும் போராட்டம்… எட்டுத்திசையிலும் ஒலிக்கும் எதிர்ப்புக்குரல்… அனைத்து இடங்களிலும் ஏவப்படும் அடக்குமுறை… டிசம்பர் 28-ஆம் தேதி முதல் பாலைவன தேசமான ஈரான் இப்படித்தான் இருக்கிறது.
1979-ஆம் ஆண்டு மன்னராட்சியில் இருந்து இஸ்லாமிய குடியரசாக மாறிய ஈரான் மேற்காசியாவில் முக்கிய நாடாக கருதப்படுகிறது. கச்சா எண்ணெய் விற்பனையில் முன்னணியில் இருந்தாலும் அண்மைக்காலமாக ஈரான் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. அந்நாட்டின் கரன்சியான ரியால் வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டுள்ளது. அதனால் ரொட்டி, பால் உள்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளால் ஈரான் பாதிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்த நிலையில் விலைவாசி உயர்வால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும் ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். குறிப்பாக ஈரானின் உச்சத்தலைவர் AYATOLLAH ALI KHAMENEI-க்கும் அவரது தலைமையிலான மதஅடிப்படைவாத அரசுக்கும் எதிராக GEN Z என்றழைக்கப்படும் இளைய தலைமுறை வெகுண்டெழுந்திருக்கிறது.
தனிமனித சுதந்திரம் மற்றும் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளால் மனதுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்த ஈரான் மக்களை எரிமலையாக வெடிக்க வைத்திருக்கிறது விலைவாசி உயர்வு. போராட்டம் என்பதைத்தாண்டி புரட்சி என்ற இடத்துக்கு ஈரானியர்கள் சென்றுவிட்டனர். சர்வாதிகாரிக்கு முடிவுகட்டுவோம் என்ற முழக்கத்துக்குடன் போராடிவரும் மக்களை அடக்கி ஒடுக்க பாதுகாப்புப்படைகளை அரசு ஏவிவிட்டது. எனினும், சொந்தநாட்டு மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த பாதுகாப்புப்படையைச் சேர்ந்த பலர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களை கைது செய்து சிறையில் அடைத்த ஈரான் அரசு, ஈராக்கில் இருந்து கூலிப்படையைச் சேர்ந்த ஐந்தாயிரம் பேரை வரவழைத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் தெற்கு எல்லையில் உள்ள SHAIB மற்றும் ZURBATIYA வழியாக யாத்ரீகர்களைப்போல் ஐந்தாயிரம் கூலிப்படையினர் நுழைந்திருப்பதாக தெரிகிறது. பழமைவாதத்தைப் பின்பற்றும் இவர்கள் அனைவரும் ஷியா முஸ்லிம்கள் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈராக் கூலிப்படை மூலம் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட சொந்தநாட்டு மக்களை ஈரான் உச்சத்தலைவர் AYATOLLAH ALI KHAMENEI கொன்றுகுவித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தலைநகர் தெஹ்ரானில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெறவில்லை என்ற தகவல் ஈராக் கூலிப்படையினரின் வருகையை உறுதிப்படுத்துவதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அரபி மொழி பேசும் ஈராக்கியர்களை ஏவி சொந்த நாட்டு மக்களை குருவி சுடுவதுபோல் சுட்டுக்கொன்றுள்ளார் AYATOLLAH ALI KHAMENEI என்பதும் அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.
ஆன்மிகப் பயணம் என்ற பெயரில் ஈரானுக்குள் புகுந்த அனைவரும் இளைஞர்கள்தான் எனக்கூறும் உள்ளூர் மக்கள், வந்தவர்கள் உண்மையிலேயே யாத்ரீகர்கள் என்றால் அந்தக்குழுவில் முதியவர்களும் குழந்தைகளும் இல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
60 பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட கூலிப்படையினர் ஈரானில் உள்ள 31 மாகாணங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டதாகவும் மொத்தம் 614 இடங்களில் அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய கூலிப்படையினரால் ஈரான் வீதிகளில் ரத்த ஆறு ஓடுவதாகவும் பிணவறையில் மனித உடல்கள் மலைபோல் குவிந்துகிடப்பதாகவும் கூறப்படுகிறது. அச்சத்தில் உறைந்துபோயிருக்கும் அந்நாட்டு மக்கள் வீட்டை வாசலைத் தாண்டக்கூட விரும்பாமல் 4 சுவர்களுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.
ஈரானில் நடைபெறும் மக்கள் புரட்சியின் பின்னால் அமெரிக்கா இருப்பதாக AYATOLLAH ALI KHAMENEI குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவரும் அமெரிக்க அதிபர் டிரம்பும் சொற்போரில் ஈடுபட்டுள்ளனர். மற்றொருபுறம் முன்பு ஈரானை ஆட்சி செய்த PAHLAVI வம்சத்தைச் சேர்ந்த REZA PAHLAVI மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வசித்துவரும் அவர், நகரங்களைக் கைப்பற்றுங்கள்… இந்த பயங்கரவாத ஆட்சி வீழும் காலம் நெருங்கிவிட்டது என வீடியோ வெளியிட்டுள்ளார். இப்படி ஆளாளுக்கு பேசி வருவதால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ ஈரான் மக்கள் தான். எது எப்படியிருந்தாலும் கூலிப்படையை ஏவி சொந்தநாட்டு மக்களை ஒரு அரசே கொலை செய்வது மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயல் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
















