இந்துக்களின் புனித நகரமான காசியில் அதாவது வாரணாசியில் உள்ள மணிகர்ணிகா படித்துறையில் இருந்த கோயில்கள், சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், அங்கு என்னதான் நடக்கிறது
உத்தரபிரதேச மாநிலம் கோயில் நகரமான வாரணாசியில் அமைந்துள்ளதுதான் வரலாற்று சிறப்புமிக்க மணிகர்ணிகா படித்துறை… 23 ஆயிரம் கோயில்களை கொண்ட இந்துக்களின் இந்த புனித நகரம் காசி, பனாரஸ், பிரம்ம வர்தா போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது…
காசி கங்கைக் கரையில் ஆதிகாலத்தில் மொத்தம் 84 படித்துறைகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது 30 மட்டுமே எஞ்சி நிற்கின்றன!
அதிலும் குறிப்பாக 5 படித்துறைகள் முக்கியத்துவம் பெற்றவை… காசி கங்கை சென்றால், பார்க்காமல் வரக்கூடாது என்ற வரிசையில் மணிகர்ணிகா படித்துறை, அரிச்சந்திரன் படித்துறை, தச அஷ்வமேத படித்துறை ஆகியவையே உயர்ந்து நிற்கின்றன… இவற்றில் மிகப்பெரியது மணிகர்ணிகா படித்துறைதான்…
காசியில் இறந்தால் புண்ணியம், சொர்க்கத்தில் சேரலாம் என்பது இந்து மக்களின் நம்பிக்கை… அதனால் பெரும்பாலானோர் காசிக்கு வந்து உயிரை துறக்கின்றனர்…
ஒரு சிலரோ இறந்தவர்களின் உடலை இங்கு கொண்டுவந்து தகனம் செய்கின்றனர்… இதில் மணிகர்ணிகா படித்துறை மிகப்பெரியது என்பதால், இங்கு ஓயாது எரியும் நெருப்பில், பகல், இரவு என்ற பாகுபாடின்றி எந்நேரமும் உடல்கள் எரியூட்டப்படுகின்றன…
மணிகர்ணிகா, அரிச்சந்திரன் படித்துறைகளில் வரிசையாக பிணங்கள் எரிவதைக் கண்டால், தானாகவே நம்முள் நான் என்கிற அகங்காரம் தொலைந்து, ஞானம் குடியேறும்… அந்தளவுக்கு அவை முக்கியத்துவம் பெற்று புனித ஸ்தலமாக விளங்குகின்றன…
குறிப்பாக மணிகர்ணிகா படித்துறையில் மட்டும் ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட உடல்களை எரியூட்ட முடியும்..
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மணிகர்ணிகா படித்துறையில் தற்போது, மணிகர்ணிகா தீர்த்த வழித்தட மேம்பாட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியாக உயர்த்தப்பட்ட தகன மேடை ஒன்று அகற்றப்பட்டுள்ளது…
அங்கு புல்டோசர்கள் இயங்கும் படங்கள், கோயில், சிலைகள் சேதமடைந்ததாக காட்டப்படும் புகைப்படங்கள், பழங்கால கோயில்கள் மற்றும் புனிதமான சிலைகள் அழிக்கப்படுவதாக புரளியை கிளப்பிவிட்டன…
உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், மணிகர்ணிகா தகன மேடை இடிப்பை சனாதன மரபுகள் மற்றும் காசியின் பாரம்பரியத்தின் மீதான தாக்குதல் என்று குற்றச்சாட்டை முன்வைத்தனர்…
மாநில அரசு வளர்ச்சி பெயரில் காசியின் உண்மையான ஆன்மிகத் தன்மையை அழித்துவிட்டதாகவும் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டனர்….
இதனைத்தொடர்ந்து மணிகர்ணிகாவுக்கு விரைந்த உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அங்கு மேற்கொள்ளப்படும் தகன உட்கட்டமைப்பை ஆய்வு செய்தார்….
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர், கோயில்களோ, சிலைகளோ உடைக்கப்பட்டதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது, முற்றிலும் தவறானது என்பதை தெளிவுபடுத்தினார்…
மாவட்ட நிர்வாகத்தின் கூற்றுப்படி, கட்டுமானத்தின்போது, கட்டமைப்பில் வைக்கப்பட்டிருந்த சில சிலைகள் கீழே விழுந்ததாகவும், ஆனால், அவை எந்த சேதமும் அடையவில்லை என்றும் கூறினர்.
வாரணாசி மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர குமார், அனைத்து சிலைகளும் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு, தொல்பொருள் துறை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார். மணிகர்ணிகா தீர்த்தத்தின் முழுமையான மேம்பாடு முடிந்த பின்னர், அந்த சிலைகள் மிகுந்த மரியாதையுடன் மீண்டும் நிறுவப்படும் என்றும் கூறினார்.
அங்குள்ள புகைப்படங்கள் மணிகர்ணிகாவில் உள்ள மாசன் கோயில், தர்கேஷ்வர் கோயில் மற்றும் ரத்னேஷ்வர் கோயில் ஆகியவை அப்படியே இருப்பதைக் காட்டுகிறது. இருப்பினும், மறுமேம்பாட்டிற்காக , ஒரு தகன மேடையும், சில பழைய துணை கட்டமைப்புகளும் அகற்றப்பட்டுள்ளன.
மணிகர்ணிகா மறுசீரமைப்பில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறும் பூசாரிகள், பாரம்பரியமான இவ்விடத்தை கூடுதல் கவனத்துடன் கையாண்டிருக்கலாம் என்று யோசனை தெரிவித்தனர்…
மணிகர்ணிகாவின் மறுசீரமைப்புத் திட்டம் ஆரம்பத்தில் சுமார் 3,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும், இறுதியில் 39 ஆயிரத்து 350 சதுர மீட்டர் பரப்பளவில் விரிவடையும்..
இது மணிகர்ணிகாவில் மிகப்பெரிய பிரத்யேக தகன வசதியாகவும் மாறும். நான்கு கட்டங்களாக பணிகள் நிறைவடைந்தவுடன், பல பொது பயன்பாட்டு வசதிகளோடு, ஒரே நேரத்தில் 19 தகனங்களை அனுமதிக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான நெரிசல், குறுகிய பாதைகள், மோசமான சுகாதாரம் மற்றும் துக்கம் அனுசரிப்பவர்களுக்கு இடமின்மை ஆகியவையே மணிகர்ணிகா சீரமைப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
மழைக்காலங்களில், தகனங்கள் பாதைகளில் பரவி, சாம்பல் மற்றும் புகை அருகிலுள்ள வீடுகளுக்குள் நுழைவதாக புகார்கள் எழுந்தன.
இதன் காரணமாக பிரதமர் மோடி 2023 ஆம் ஆண்டு மணிகர்ணிகா தீர்த்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஸ்ரீ காசி விஸ்வநாத் கோயில் அறக்கட்டளை நிதி மூலம் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
மணிகர்ணிகா படித்துறையில் பணிகள் முடிந்ததும் மேம்பட்ட அணுகல், சுகாதாரம், இருக்கைகள் மற்றும் சடங்கு இடங்களுடன் காசி வழித்தடத்தின் நீட்டிப்பை ஒத்திருக்கும் என்று கூறப்படுகிறது.
பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மணிகர்ணிகா திட்டம் தற்போது நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் நகர்ப்புற மறுவளர்ச்சி ஆகியவற்றை தாங்கி நிற்கிறது. விரைவில் அதில் உயிரோட்டத்தை காணலாம்…..
















