சிங்கம்புணரி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான நுடவைத்தியரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த போலீசார், கிளீனிக்கிற்கு சீல் வைத்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான நுடவைத்தியரான நெடுஞ்செழியன் என்பவர் புத்தூர் கட்டு பாண்டி என்ற பெயரில் கிளீனிக் நடத்தி வந்தார்.
கடந்த சில மாதங்களாக சமூக ஊடகத்தில் நேரலையில் பேசிக்கொண்டே சிகிச்சை அளித்ததால் நாள்தோறும் 100 பேர் வரை டோக்கன் பெற்று மருத்துவம் பார்த்து வந்துள்ளனர்.
18 சித்தர்களில் ஒருவராகவும், தனது உடம்பை தொட்டு வணங்கினால் சிகிச்சை பெறுவோர்க்கு பலன் கிடைப்பதாகவும் கூறி நெடுஞ்செழியன் தைல பாட்டில்களை விற்பனை செய்துள்ளார்.
நெடுஞ்செழியனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அரசு அதிகாரிகள், காவல்துறையின் உதவியுடன் நெடுஞ்செழியன் வீடு மற்றும் கிளீனிக்கில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, காலாவதியான தைலம் பாட்டில்கள் மற்றும் எண்ணெய் வகைகள் இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து, சுகாதார நலத்துறை இணை இயக்குநர் அளித்த புகாரின்பேரில் கிளீனிக்கிற்கு சீல் வைத்த காவல்துறையினர், நுடவைத்தியர் நெடுஞ்செழியனை கைது செய்தனர்.
மேலும், கிளீனிக்கின் உரிமத்தில் குளறுபடி உள்ளதால், நெடுஞ்செழியன் நுட வைத்தியரா என்பது குறித்து விசாரணைக்கு பின் தெரியவரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















