பாகிஸ்தானுடனும் துருக்கியுடனும் கை கோர்த்துள்ள சவூதி அரேபியாவுக்கு எதிராக இந்தியாவுடன் நெருக்கம் கட்டி வருகிறது ஐக்கிய அரபு அமீரகம். இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவுக்கு வந்திருப்பது புவிசார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஈரானை அமெரிக்கா தாக்குமா? எப்போது தாக்கும் என்ற கேள்வி உள்ள நிலையில், ஏமன் தொடர்பாக சவூதி அரேபியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் மோதல் உருவாகியுள்ளது.
ஏற்கெனவே, 1991ம் ஆண்டில் இருந்தே சோமாலியாவிலிருந்து பிரிந்து ஒரு தனி நாடாகச் செயல்பட்டு வரும் சோமாலிலாந்தை தனிச் சுதந்திர நாடு என்று இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது.
இந்த அங்கீகாரத்தைத் துருக்கி, சவூதி அரேபியா, எகிப்து, ஓமன், ஜோர்டான் உள்ளிட்ட மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன.
மேலும் ஆபிரகாம் உடன்படிக்கையில் (Abraham Accords) இணைய சோமாலிலாந்து விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் திடீரென சோமாலிலாந்தை அங்கீகரித்ததற்குப் பின் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது எனக் கூறப்படுகிறது.
சொல்லப்போனால் ஜிசிசியில் மொத்தமுள்ள பஹ்ரைன், ஓமன், குவைத், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளில், 2020-ஆம் ஆண்டில் இஸ்ரேலுடன் ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைந்த முதல் நாடு ஐக்கிய அரபு அமீரகமும், பஹ்ரைனும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கடந்த ஆண்டு, பாகிஸ்தானுடன் சவூதி அரேபியா பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மேலும், அணு ஆயுதம் உள்ள பாகிஸ்தான், செல்வம் உள்ள சவூதி அரேபியா மற்றும் நேட்டோவில் இரண்டாவது பெரிய இராணுவமான துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் ஒரு இஸ்லாமிய நேட்டோ அமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.
ஏற்கெனவே, ஆப்ரேஷன் சிந்தூரில் துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானை ஆதரித்தது மட்டுமில்லாமல், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தனது எக்ஸ் பக்கத்தில் பாகிஸ்தான் – துருக்கி உறவு நீடூழி வாழ்க எனவும் பதிவிட்டிருந்தார்.
இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் நிலைப்பாடுடைய துருக்கி, ஐநா சபையில் இதை வெளிப்படுத்தியுள்ளது.
சைபர்ஸுக்கும் துருக்கிக்கும் நீண்டகாலமாக பிரச்னை இருந்துவரும் சூழலில், கடந்த இருபது ஆண்டுகளில் முதல்முறையாக பிரதமர் மோடி, சைப்ரஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ், பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான “மாரியோஸ் III கிராண்ட் கிராஸ்” விருதை வழங்கிச் சிறப்பித்தார்.
இருதரப்பு உறவுகள் மட்டுமில்லாமல் IMEC எனப்படும் இந்தியா- மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார பாதையை மேம்படுத்துவது பற்றியும் பிரதமர் மோடி செயல்திட்டங்களை வழங்கினார் என்று கூறப்படுகிறது.
சைப்ரஸ் மற்றும் கிரீஸ் ஆகிய இரண்டு நாடுகளும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், காஷ்மீர் விவகாரம், ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் உள்ளிட்ட பல முக்கியப் பிரச்சனைகளில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
1983க்குப் பிறகு எந்த இந்திய பிரதமரும் செல்லாத கிரேக்கத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பிரதமா் கிரியகோஸ் மிட்சோடாகிஸுடன் பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்தைகள் நடத்தினார்.
ஏற்கெனவே, இஸ்ரேல்- சைப்ரஸ்- கிரேக்க முத்தரப்பு ஒத்துழைப்பு இருந்து வருகிறது.
கூட்டு இராணுவப் பயிற்சிகள், நவீன ட்ரோன் அமைப்புகள், மின்னணு போர்ப் பயிற்சிகள் மற்றும் உளவுத் துறை தகவல்கள் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப பரிமாற்றம் என மூன்று நாடுகளும் இணைந்து செயல் படுகின்றன. இந்த கூட்டணியில் இந்தியாவும் இணைய இஸ்ரேல் அழைப்பு விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக துருக்கிக்கு எதிராக இஸ்ரேல்- சைப்ரஸ்- கிரேக்க கூட்டணியில் இந்தியாவும் சேர்வது, ஒரு சக்திவாய்ந்த இராணுவக் கூட்டணியை உருவாக்கும் என்று கூறப் படுகிறது.
இந்திய தலைமையிலான இந்த மத்திய தரைக்கடல் கூட்டணி , சவூதி அரேபியா -பாகிஸ்தான்-துருக்கியின் இஸ்லாமிய நேட்டோவின் வளர்ந்து வரும் செல்வாக்கை தகர்க்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஏற்கெனவே 2020ம் ஆண்டு, இஸ்ரேலுடன் தூதரக உறவைத் தொடங்கியிருப்பதன் மூலம் மத்திய கிழக்கில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது ஐக்கிய அரபு அமீரகம். இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவுக்கு வந்திருப்பது புவிசார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வரும் ஐக்கிய அரபு அமீரகமும் இந்த இந்தியா, இஸ்ரேல்- சைப்ரஸ்- கிரேக்க கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
















