யூடியூபர் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில் வரும் 23 ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்ட யூடியூப் சவுக்கு சங்கருக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவிட்டிருந்தது.
இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில், சவுக்கு சங்கர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, செல்போன் கால், வாட்ஸ்அப் கால்மூலம் விசாரணை அதிகாரிகளை மிரட்டுகிறார். சாட்சிகளையும் மிரட்டுகிறார். விசாரணை அதிகாரியை கொலைகாரன் என்று திட்டி இருப்பதாக தெரிவிக்கப்ப்ட்டது.
மருத்துவ சிகிச்சை என்று சொல்லி இடைக்கால ஜாமீன் பெற்ற நிலையில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறி சவுக்கு சங்கர் தொடர்ந்து யூடியூப் வீடியோ போட்டு வருகிறார் அவதூறுகளை பரப்பி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சவுக்கு சங்கர் தரப்பில், இந்த வழக்கில் நீதிபதிகள் பாரபட்சமாக உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக தனக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வழக்கில் சட்டப்படி தான் முடிவெடுப்போம், நீதிமன்றத்தை ப்ளாக் மெயில் செய்து பணிய வைக்க முடியாது என சவுக்கு சங்கரை எச்சரித்தனர்.
இதுமட்டுமல்லாமல் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக கண்டபடி மரியாதையில்லாமல் காவல்துறை விசாரணை அதிகாரியை பேசலாமா? எனவும் சவுக்கு சங்கருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
காவல்துறை அதிகாரிகளை மரியாதை இல்லாமல் பேசக் கூடாது என சவுக்கு சங்கரின் தாயார் தான் அவருக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் வரும் ஜனவரி 23 ம் தேதி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தெரிவித்து வழக்கினை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
















