கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கள்ளக்குறிச்சியில் நீர்நிலை பகுதிகளில் கட்டப்படும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் குமரேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டதாகவும், பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
இதனை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாதங்கள் தொடர்வதால் கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும் என உத்தரவிட்டனர்.
மேலும், புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு தடைவிதிக்க கோரிய வழக்கை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
















