அமைச்சர் நேரு துறையில், பணியிட மாறுதலுக்கு சுமார் 366 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டதாக தமிழக டிஜிபிக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவது கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் 888 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்றும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் கடந்தாண்டு அக்டோபரில் தமிழக டிஜிபி வெங்கடராமனுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதினர்.
இதனை தொடர்ந்து, கடந்தாண்டு டிசம்பரில், மீண்டும் அமைச்சர் நேரு துறையில், டெண்டர் முறைகேடு தொடர்பாக ஆயிரத்து 20 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக 2வது கடிதத்தை அனுப்பினர்.
இந்நிலையில், அமைச்சர் நேரு துறையில் பணியிட மாறுதல் செய்வதற்கு 365 கோடியே 87 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டு உள்ளதாக தமிழக டிஜிபி வெங்கடராமனுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் 3வது கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
நேருவுக்கு நெருக்கமானவர்களின் மொபைல் ஃபோனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றம் குறித்த ஆவணங்களை கடிதத்துடன் அனுப்பியுள்ளனர்.
மேலும், பணியிட மாறுதலுக்கு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை பணம் வசூலித்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
















