ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரசை சரிகட்டும் முயற்சியாக, அசாம் மாநில தேர்தல் செலவை ஏற்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2004 முதல் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், வரும் தேர்தலில் 41 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் கேட்டு ஆளும் தரப்புக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைக்கு திமுக உடன்படாவிட்டால் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என காங்கிரசில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 17ஆம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டை முடிப்போம் என்று காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என திமுக எதிர்பார்த்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்காததால், தேர்தல் செலவுக்கு போதிய பணமில்லாமல் தவித்து வரும் காங்கிரசை வழிக்கு கொண்டுவர திமுக திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரசை சரிக்கட்டும் முடிவுக்கு வந்துள்ள திமுக தலைமை, அசாம் மாநில தேர்தல் செலவை ஏற்க முன்வந்துள்ளதாகவும், வேறு எந்த நெருக்கடியும் கூடாது என்று திமுக தரப்பில் பேசி முடித்துள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















