பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபர்(Sheikh Mohamed bin Zayed Al Nahyan) ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே டெல்லியில் செலவிட்டபோதிலும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளன
கடந்த திங்கட்கிழமை மாலை 4.20 மணிக்கு இந்தியாவுக்கு வருகை தந்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்ற பிரதமர் மோடி, ஒரே காரில் அவரை அழைத்துக் கொண்டு மாலை 4.45 மணிக்கு அதிகாரப்பூர்வமாக திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின், மாலை 6.05 மணிக்கு, ஐக்கிய அரபு அமீரகத் தலைவர் தனது நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அபுதாபியில் இருந்து இந்தியாவுக்கான பயண நேரத்தை விட குறுகிய நேரமே இந்தியாவில் செலவளித்துள்ளார் ஐக்கிய அரபு அமீரக அதிபர்.
இது கடந்த 10 ஆண்டுகளில் அவரது ஐந்தாவது இந்தியப் பயணம் ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக பதவியேற்ற அவர் இந்தியாவுக்கு வருவது இது மூன்றாவது முறையாகும்.
இந்தச் சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான ‘உத்திபூர்வ கூட்டாண்மை’ என்ற Comprehensive Strategic Partnership புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில், இருதரப்பு வர்த்தகத்தை 2032-ஆம் ஆண்டிற்குள் 200 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இலக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து 2028ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 5 லட்சம் மெட்ரிக் டன் திரவ இயற்கை எரிவாயு எல்என்ஜி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கத்தாருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய LNG விநியோக நாடாக ஐக்கிய அரபு அமீரகம் மாறியுள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் ‘டிஜிலாக்கர்’ வசதியை அமீரகத்துடன் இணைப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
குஜராத்தில் உள்ள சிறப்பு முதலீட்டுப் பகுதியான தோலேராவின் மேம்பாட்டில் பங்கேற்பதற்கான “letter of intent” கடிதத்திலும் ஐக்கிய அரபு அமீரகம் கையெழுத்திட்டுள்ளது.
இதன் மூலம் எரிசக்தி, விமான நிலையம், விமானி பயிற்சி வசதிகள், ரயில்வே இணைப்பு மற்றும் துறைமுகங்கள் உட்பட உள்கட்டமைப்புகளை ஏலம் எடுக்கவும் கட்டவும் அமீரக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும், அபுதாபியில் ‘ஹவுஸ் ஆஃப் இந்தியா’வை அமைக்கவும் குஜராத்தில் உள்ள கிஃப்ட் சிட்டியில் ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்களான ஃபர்ஸ்ட் அபுதாபி வங்கி (FAB) மற்றும் டிபி வேர்ல்ட் ஆகியவற்றின் அலுவலகங்கள் மற்றும் செயல்பாடுகளை அமைக்கவும் முடிவெடுக்கப் பட்டுள்ளது.
விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கூட்டு முயற்சி மற்றும் விண்வெளித் துறையில் முழு ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் செயல் திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன.
வெளியுறவு அமைச்சக அறிக்கையில், மேம்பட்ட அணுசக்தி தொழில்நுட்பங்களில் ஒத்துழைக்க இருநாடுகளும் முடிவு செய்ததாகவும், “இந்தியாவை மாற்றுவதற்கான நிலையான அணுசக்தி பயன்பாடு மற்றும் முன்னேற்றம் (சாந்தி) சட்டம் இயற்றப்படுவதை வரவேற்றதாகவும், இது மேம்பட்ட சிவில் அணுசக்தி ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றும் குறிப்பிட்டதாகவும்” தெரிவித்தது.
மேலும், பெரிய அணு உலைகள் மற்றும் சிறிய மட்டு உலைகளை உருவாக்குதல் மற்றும் பயன்படுத்துதல், மேம்பட்ட உலை அமைப்புகள், அணு மின் நிலைய செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு மற்றும் அணுசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பு உள்ளிட்ட மேம்பட்ட அணுசக்தி தொழில்நுட்பங்களில் கூட்டாண்மைக்கு இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
பயங்கரவாத நிதியுதவியை எதிர்ப்பதற்கு மற்றும் பணமோசடி எதிர்ப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு நிதி நடவடிக்கை பணிக்குழுவின் கட்டமைப்புக்குள் இருநாடுகளும் ஒத்துழைப்பைத் தொடர முடிவெடுத்துள்ளன.
பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் கண்டித்துள்ள ஐக்கிய அரபு அமீரக அதிபர், பயங்கரவாத செயல்களுக்கு நிதியளிப்பவர்கள், திட்டமிடுபவர்கள், ஆதரிப்பவர்கள் மற்றும் பயங்கரவாத செயல்களைச் செய்பவர்களுக்கு எந்த நாடும் பாதுகாப்பான புகலிடத்தை வழங்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக ஏமன் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா இடையே போர் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ள சவூதி அரேபியா, துருக்கியுடன் இணைந்து புதிய இஸ்லாமிய நேட்டோ கூட்டணியை அமைக்க முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவை பாதுகாப்புத் துணையாக ஐக்கிய அரபு அமீரகம் கருதுகிறது. மேலும் ஈரானை அமெரிக்கா தாக்காமல் இருக்க பிரதமர் மோடி சொன்னால் மட்டுமே ட்ரம்ப் கேட்பார் என்றும் ஐக்கிய அரபு அமீரகம் நம்புவதாக கூறப்படுகிறது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, காசாவில் அமைதி மற்றும் புனரமைப்பு பணிகளைக் கண்காணிக்க அமெரிக்க உருவாக்கியுள்ள குழுவில் இணைய பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
ஏற்கெனவே ட்ரம்பின் காசா அமைதி வாரியத்தில் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்துள்ள நிலையில், இந்தியாவையும் அதில் சேர வைப்பதற்கான வழியாகவே ஐக்கிய அரபு அமீரக அதிபர் (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அவசர இந்திய பயணம் பார்க்கப்படுகிறது.
















