இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அதிபர் ட்ரம்பின் சொத்து மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே தனிப்பட்ட முறையில் அதிக லாபம் ஈட்டிய அதிபர் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
தேர்தல் களத்தில் இறங்கும் முன்பே, அமெரிக்காவில் பெரும் தொழிலதிபர்களில் ஒருவராக வலம் வந்தவர் ட்ரம்ப். அவரின் பெரும் சொத்து மதிப்பில் ரியல் எஸ்டேட் துறையே முக்கிய பங்கு வகிக்கிறது.
நியூயார்க்கில் மிகவும் வெற்றிகரமான ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கிய தனது தந்தை பிரெட் ட்ரம்பிடமிருந்து, ரியல் எஸ்டேட் தொழிலின் நிர்வாகத்தைப் பெற்ற ட்ரம்ப், கோல்ஃப் ரிசார்ட்டுகள் ஹோட்டல்கள் என ரியல் எஸ்டேட் முதலீடுகளில் இருந்தே அதிகப் பணம் சம்பாதித்துள்ளார்.
1982ல் முதல் முறையாக ஃபோர்ப்ஸ் இதழின் 400 உலகப் பணக்காரர்களின் பட்டியலில் தனது தந்தை ஃப்ரெட்டுடன் ட்ரம்ப் இடம்பெற்றார். அப்போது இருவரின் மொத்த சொத்து மதிப்பு 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆனாலும் ட்ரம்பின் தனிப்பட்ட நிதி ஆதாரங்களாக அல்லது அடையாளங்களாக, வோட்கா, ஸ்டீக்ஸ், டைஸ், புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களே இருந்தன.
புளோரிடாவில் மார்-ஏ-லாகோ, நியூயார்க்கில் ட்ரம்ப் டவர் மற்றும் ஸ்காட்லாந்தில் கோல்ஃப் மைதானங்கள் என உலகமெங்கும் சுமார் 20 முக்கிய ரியல் எஸ்டேட் சொத்துக்களின் உரிமையை வைத்துள்ளார் ட்ரம்ப்.
மேலும் ட்ரம்ப் ஃபோர்ஸ் ஒன் என்ற 1991 போயிங் 757 விமானமும் வைத்துள்ளார்.
முதல் முறை அமெரிக்க அதிபரான போது ட்ரம்பின் சொத்து மதிப்பு 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
அமெரிக்காவின் 47வது அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற நேரத்தில் ட்ரம்பின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
இந்த முறை அதிபரானதும் ட்ரம்ப் தனது தொழில் சாம்ராஜ்யத்தை கிரிப்டோகரன்சி, சமூக ஊடகங்கள் முதல் உலகளாவிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள் மற்றும் மேம்பட்ட எரிசக்தி தொழில்நுட்பம் வரை விரிவு படுத்தியுள்ளார்.
ட்ரம்ப் மீடியா & டெக்னாலஜி குரூப் (TMTG) என்ற நிறுவனத்தின் மூலம் ட்ரூத் சோஷியல் என்னும் சமூக ஊடக தளத்தை உருவாக்கினார்.
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில் இந்நிறுவனத்தை அணு இணைவு தொழில்நுட்ப நிறுவனமான TAE டெக்னாலஜிஸுடன் இணைத்தார். இதற்கான அனைத்து பங்கு பரிவர்த்தனையும் சுமார் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணிக்கப் பட்டது.
2021ஆம் ஆண்டு கிரிப்டோவை ஒரு மோசடி என்று அறிவித்த ட்ரம்ப், பிறகு தனது கருத்தை மாற்றிக்கொண்டார்.
கடந்த ஜனவரி மாதம் அதிபராக பதவி ஏற்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு $ TRUMP என்ற மீம் நாணயத்தை வெளியிட்டார். வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே $TRUMP meme coin விலை 300 சதவீதம் உயர்ந்து, உலகத்தை வியக்க வைத்தது.
அடுத்த இரண்டு நாட்களில் அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப்பும் $ MELANIA ஐ அறிமுகப்படுத்தினார்.
குறிப்பாக 19 வயதே ஆன ட்ரம்பின் இளைய மகன் பாரன் ட்ரம்ப்பின் சொத்து மதிப்பு தாயார் மெலானியா மற்றும் சகோதரி இவாங்கா ட்ரம்ப்பின் சொத்து மதிப்பை விட பலமடங்கு அதிகரித்துள்ளது. பாரா ட்ரம்பின் சொத்து மதிப்பு 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
அதே நேரம் 43 வயதான இவாங்கா ட்ரம்பின் சொத்து மதிப்பு மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ட்ரம்பின் மூத்த மகன் ட்ரம்ப் ஜூனியரின் நிகர மதிப்பு கடந்த ஆண்டில் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.
அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப் தனது வாழ்க்கையைப் பற்றிய ஆவணப்படத்திற்காக அமேசான் ஸ்டுடியோஸிடமிருந்து சுமார் 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெற்றதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
இதற்காகவே கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவில் கிரிப்டோகரன்சியை ஒழுங்குபடுத்தும் முதல் சட்டமான GENIUS யை ட்ரம்ப் கொண்டுவந்தார்.
கிரிப்டோகரன்சி வணிகம் மூலமே ட்ரம்ப் குடும்பத்தினர் கணிசமான லாபத்தைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ட்ரம்ப் மீண்டும் பதவிக்கு வந்ததிலிருந்து, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா மற்றும் மாலத்தீவுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான பிராண்டிங் ஒப்பந்தங்களில் அவரது நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள தனது கோல்ஃப் மைதானங்களுக்குப் பயணம் செய்த ட்ரம்ப், பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கூடவே தனது இரண்டு மகன்கள் மற்றும் ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் ஜான் ஸ்வினி ஆகியோருடன் ஒரு புதிய கோல்ஃப் மைதானத்தைத் திறந்து வைத்தார்.
இப்படி ட்ரம்ப் உரிம ஒப்பந்தங்கள் மற்றும் பிராண்டட் பொருட்கள் மூலமாகவும் மில்லியன் டாலர்கள் கணக்கில் ட்ரம்ப் சம்பாதித்து வருகிறார்.
இது தவிர பைபிள் விற்பனை, ட்ரம்ப் கிட்டார் விற்பனை,ட்ரம்ப் கைக்கடிகார விற்பனை,ஸ்னீக்கர்கள் மற்றும் வாசனை திரவிய விற்பனை என வருமானம் வந்ததாக ட்ரம்பின் 2025 ஆம் ஆண்டு நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் நிகர சொத்து மதிப்பை 7.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ள நிலையில், நியூயார்க் டைம்ஸ் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
அதிபராக இருந்தபடி தனது சொத்து மதிப்பை அதிகரிக்கும் தேர்ந்த வியாபாரியாகவும் ட்ரம்ப் திகழ்கிறார் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
















