கேரளாவில் பேருந்தில் பாலியல் சீண்டல் அளிக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட ரீல்ஸ் வைரலாகி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தலைமறைவாக இருந்த யூடியூபர் ஷிம்ஜிதா கைது செய்யப்பட்டார்.
கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக் என்பவர் ஜவுளி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 16-ம் தேதி பணி நிமித்தமாக கண்ணூர் நோக்கி பேருந்தில் சென்றார்.
அப்போது அவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி யூடியூபர் ஷிம்ஜிதா என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தீபக்கின் முழங்கை ஷிம்ஜிதாவின் உடலில் படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், தீபக் அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே அந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள், தீபக் தவறு செய்யவில்லை எனவும், புகழ் வெளிச்சத்துக்காக ஷிம்ஜிதா வீடியோ வெளியிட்டதாகவும் கருத்து தெரிவித்தனர்.
யூடியூபர் ஷிம்ஜிதா மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து யூடியூபர் ஷிம்ஜிதா தலைமறைவான நிலையில், போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்காக கோழிக்கோடுக்கு அழைத்து சென்றனர்.
















