மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ள நிலையில், ஏழு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். மேலும், இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் உள்பட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் என்பதால் தமிழக காவல்துறை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் மூன்றாயிரத்து 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், 7 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 10 இடங்களில் பொதுமக்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அமருவதற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகளும், தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று 200க்கும் மேற்பட்ட மொபைல் டாய்லெட் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பேனர் வைக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.
















