வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 61 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் GDP இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதையும்,
நூறுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளதையும் குறிப்பிட்ட பிரதமர் மோடி,
இந்தியா மற்ற நாடுகளுடன் செய்து வரும் வர்த்தக ஒப்பந்தங்கள், நமது இளைஞர்களுக்கு உலகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசு ஊழியர்கள் தங்களை மக்களின் சேவகர்களாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி,
குடிமக்களே தெய்வம் எனும் தாரக மந்திரத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
சிவகங்கையில் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 148 பேருக்கு பணி நியமன ஆணையை மத்திய இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் வழங்கினார்.
மத்திய அரசின் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 8 ஆம் கட்ட ரோஜ்கர் மேளா நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை அடுத்த இலுப்பக்குடி பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற ரோஜ்கார் மேளா நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் கலந்து கொண்டார்.
தொடர்ந்து அவர் 148 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
















