பெரம்பலூரில் காவல்துறை வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கியுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தமிழக அரசின் அலட்சியப்போக்கு கண்டனத்திற்குரியது என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், திமுகவின் நான்கரை ஆண்டு ஆட்சியில் கொலை, கொள்ளைகள் தொடங்கி, பாலியல் குற்றங்கள், போதைப்பொருள், துப்பாக்கி பயன்பாடு வரிசையில், தற்போது வெடிகுண்டு கலாசாரமும் இணைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது சட்டத்தின் மீது குற்றவாளிகளுக்கு துளியும் அச்சமில்லை என்பதை உணர்த்துவதாகத் தெரிவித்த டிடிவி தினகரன், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதுடன், காவல்துறையினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
















