தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துக்களை பொதுவெளியில் பேசக்கூடாது என ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகள் பலர் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி வருகின்றனர். ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று திமுக திட்டவட்டமாக கூறிவிட்டது.
எனினும், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்பதே தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் அடிநாதமாக உள்ளது. அண்மையில் டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் இதையே வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், ஆட்சியில் பங்கு என பொதுவெளியில் பேசக்கூடாது என காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் வாய்ப்பூட்டு போட்டது. டெல்லியில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் தனிப்பட்ட கருத்துக்களை கேட்டதாக காங்கிரஸ் எம்,பி., மாணிக்கம் தாக்கூர் தெரிவித்தார்.
மேலும், இந்த கருத்துக்களை வெளியில் பேசக்கூடாது என்று இருவரும் கூறியதாக மாணிக்கம் தாகூர் அவர் கூறியுள்ளார்.
















