கள்ளக்குறிச்சி அருகே மருத்துவர்களின் அலட்சியத்தால் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்
திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆயுப்கான், இவர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.நேற்று திடீரென ஆயுப்கானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரது மகன் முகமது நபி கான் உடனடியாக தனது தந்தையை, அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் அழைத்து சென்றுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆயுப்கானை செவிலியர்களும், ஊழியர்களும் உடனடியாக முதலுதவி சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நீண்ட நேரத்திற்கு பிறகு அயுப்கானுக்கு மருத்துவர் சிகிச்சை அளித்த நிலையில், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.
மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக அயுப்கான் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள், மருத்துவமனையின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
















