திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி 12 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு, விருப்ப மனு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளை கேட்டுப் பெறுவது என்று ஆலோசிக்கப்பட்டதாகவும், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்கு வங்கி அதிகம் உள்ள 12 தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் கொடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் கோவை தெற்கு, சென்னை, திருச்சி மாவட்டங்களில் சில தொகுதிகள் உள்ளதாகவும், டார்ச் லைட் சின்னத்தில்தான் போட்டி என்பதில் கமல் தெளிவாக உள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















