2026ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளை பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கலை, கல்வி, இலக்கியம், அறிவியல், மருத்துவம், சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 45 பேர் கொண்ட பட்டியலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பாக, தமிழகத்தை சேர்ந்த கால்நடை அறிவியலாளர் மருத்துவர் புண்ணியமூர்த்தி, தஞ்சையை சேர்ந்த ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், நீலகிரியை சேர்ந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணன், சேலத்தை சேர்ந்த ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர், திருவாரூரை சேர்ந்த மிருதங்க கலைஞர் பக்தவச்சலம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சிலம்பக்கலைஞர் பழனிவேல் ஆகியோருக்கு குடியரசுத் தலைவரின் கரங்களால் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளன.
















