2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டில் 5 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 13 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 14 பேர் இடம்பெற்றுள்ளனர். மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா, கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மலையாள நடிகர் மம்முட்டி, தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, சமூக செயற்பாட்டாளர் மயிலானந்தன் உள்ளிட்ட 13 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நடிகர் மாதவன், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உள்ளிட்டோருக்கும், விளையாட்டுப் பிரிவில் வீரர் ரோஹித் சர்மா, இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், ஹாக்கி வீராங்கனை சவிதா புனியா உள்ளிட்டோருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் உள்ளிட்டோரும் இந்த ஆண்டின் பத்ம ஸ்ரீ விருதினை பெற உள்ளனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவத்தின் மிகச்சிறந்த அதிகாரிகளில் ஒருவரான கர்னல் சோபியா குரேஷிக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தின் சார்பாக உலக நாடுகளுக்குத் தகவல்களைத் தெளிவாக எடுத்துரைத்தவர் கர்னல் சோபியா குரேஷி. இந்நிலையில், அவரை கெளரவிக்கும் வகையில் மத்திய அரசு இந்த பதக்கத்தை அறிவித்துள்ளது.
அதேபோல், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு, நாட்டின் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்த முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனைக்காக அவருக்கு இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டுக்கு சிறப்பான பங்களிப்பு வழங்கிய அனைத்து பத்ம விருதாளர்களுக்கும் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
தங்களது திறமை, அர்ப்பணிப்பு மற்றும் சேவை நமது சமுதாயத்தின் வளமைக்கு உதவிகரமாக அமைந்தது எனவும் இந்த கௌரவம், அடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் எனவும் கூறியுள்ளார்.
















