நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. கடந்த 21ம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. தொடர்ந்து 23ம் தேதி நடைபெற்ற 2வது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் 3ஆவது போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. டாஸை வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் பும்ரா 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா , ரவி பிஷ்ணோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி, 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் விளாசி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியுள்ளது.
கிரிக்கெட் போட்டி முடிந்ததும் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மாவின் பேட்டை நியூசிலாந்து வீரர்கள் வாங்கி பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது. 3வது டி20 போட்டியில் 20 பந்துகளில் அபிஷேக் 68 ரன்கள் விளாசினார். இதனால் அவர் பயன்படுத்திய பேட்டை நியூசிலாந்து வீரர்கள் வாங்கி ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
















