சட்டமன்ற தேர்தலில் மக்கள் முன்னேற்ற கழகம் பிரதான கூட்டணியில் இடம்பெற்று போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் மக்கள் முன்னேற்ற கழகத்தின் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கட்சியின் 55 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய கொள்கை விளக்கப் புத்தகம் வெளியிடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகநாத் மிஸ்ரா, திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இறுதி முடிவை பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்க உள்ளதாக கூறினார். மேலும், மக்கள் முன்னேற்ற கழகத்தின் மக்கள் நல கொள்கைகளை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் எனவும் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்தார்.
















