அதிமுகவில் இருந்து விலகியவர்கள் திமுகவில் இணைந்து வருவதால், அதிமுக அணியாக மாறி வருவதாக அக்கட்சியினர் புகைச்சலில் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலில் வென்று, எப்படியாவது ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் அதிமுக மற்றும் ஓபிஎஸ் அணியில் இருந்து முன்னாள் எம்.பி.க்கள் அன்வர் ராஜா, மைத்ரேயன், எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை திமுகவில் சேர்த்து கொண்டது.
சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலினை அழைத்து ஆதரவாளர்கள் இணையும் விழாவை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என பலர் திமுகவில் இணைந்த நிலையில், வெகு காலமாக கட்சியில் இருப்போர் புறக்கணிக்கப்படும் நிலை உருவாகி உள்ளதாக அமைச்சர்களிடம் திமுக நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
2021ல் திமுக ஆட்சி அமைந்தபோது அதிமுகவில் வந்த 8 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாகவும், அடுத்த திமுக அரசு அமைந்தால் பாதிக்கும் மேல் அதிமுகவினரே அமைச்சர்களாக இருப்பார்கள் எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போதைய சூழலில், திமுக என்னும் அதிமுகவை, ஒரிஜினல் அதிமுக எதிர்த்து போட்டியிடும் சூழல் உருவாகி உள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
















