பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி என காங்கிரசை விமர்சனம் செய்த திமுக எம்.எல்.ஏ கோ.தளபதிக்கு, காங்கிரஸ் கட்சியில் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.
மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ. கோ.தளபதி, காங்கிரஸ் கட்சியில் தொகுதிக்கு மூன்றாயிரம் முதல் நான்காயிரம் வாக்குகளே உள்ளன என்றும்,
மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோருக்கு அடுத்த முறை சீட் கொடுக்கக் கூடாது என்றும் பேசியது இண்டி கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோ.தளபதியின் இந்த பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மொழிப்போர் தியாகிகளின் நினைவை போற்றும் மேடையில் கூட்டணி கட்சியை இழிவுபடுத்துவதா? என்று கேள்வி எழுப்பிய அவர், காங்கிரஸ் கட்சியையும், உறுப்பினர்களையும் இழிவாக பேசிய தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமாரும், கோ.தளபதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பதுபோல் காங்கிரஸ் கட்சியை தாக்குவது பொறுப்பற்ற அரசியல் என்றும், அடுத்த கட்சிகளின் சீட்டு விவகாரங்களில் தலையிடுவது அரசியல் நாகரிகமல்ல என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், முதல்வர் ஸ்டாலினுக்கும், ராகுல் காந்திக்கும் இடையிலான நட்புக்கும், இண்டி கூட்டணிக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்களை யாரும் செய்ய வேண்டாம் என்றும் ராஜேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
















