திருச்சி மாவட்டம், மணப்பாறை ரயில் நிலையத்தில் அந்யோதயா விரைவு ரயில் நின்று செல்வதை வரவேற்று பாஜக, காங்கிரஸ் மற்றும் மதிமுகவினர் போட்டி போட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை இருமார்க்கத்திலும் செல்லும் அந்யோதயா விரைவு ரயில் ஜனவரி 26ஆம் தேதி முதல் மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்தது.
அதன்படி, மணப்பாறை ரயில் நிலையம் வந்த அந்யோதயா விரைவு ரயிலை வரவேற்றும், பிரதமர் மோடி வாழ்க என முழக்கம் எழுப்பியும் பாஜகவினர் வரவேற்றனர். இதற்கு போட்டியாக, ராகுல் காந்தி வாழ்க என்று காங்கிரசாரும், எம்பி துரை வைகோவிற்கு நன்றி தெரிவித்து மதிமுகவினரும் கோஷம் எழுப்பினர்.
பின்னர், ரயிலில் ஏறிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் பாஜக நிர்வாகிகள் பைலட்டுகளுக்கு இனிப்புகளை வழங்கினார். மணப்பாறை ரயில் நிலையத்தில் பாஜக, காங்கிரஸ், மதிமுகவினர் மாறி மாறி முழக்கம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
















