தனியார் மின்சார பேருந்துகளின் பராமரிப்புக்கான கட்டணத்தை, மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு கூடுதலாக செலுத்தி வருவதாக ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஒப்பந்த அடிப்படையில், தனியார் மின்சார பேருந்துகளை இயக்கும் திட்டம் கடந்தாண்டு சென்னையில் முதல்முறையாக தொடங்கப்பட்டது.
சென்னையில் இயக்கப்படும் 380 தனியார் மின்சார பேருந்துகள் நிறுவனங்கள் சார்பில் பாரமரிப்பு பணிகள் மேற்கொள்ள 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஒரு கிலோ மீட்டருக்கு ஏசி அல்லாத பேருந்துகளுக்கு 77 ரூபாய் 16 காசுகள் என்றும்,
ஏசி பேருந்துகளுக்கு 80 ரூபாய் 86 காசுகள் என நாள் ஒன்றுக்கு 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது, மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் 22 ரூபாய் வரை அதிகம் எனவும் கூறியுள்ளனர். ஒரு பேருந்துக்கு அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் ரூபாய் மட்டும் வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது என்றும், மின்சார பேருந்துக்கு 11 ஆயிரம் ரூபாய் வாடகையை தனியார் நிறுவனத்திற்கு அரசு தரப்பு வழங்கி வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
இது அரசு போக்குவரத்துக் கழகங்களின், நிதி நிலைமையை சீராக்காமல் மறைமுக ஊழலுக்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில், காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் தேவை என்றும், ஆனால், போக்குவரத்து கழகங்களின் நடவடிக்கை ஆக்கப்பூர்வமாக இல்லாமல், அழிவுப் பாதைக்கு சென்று விடக்கூடாது எனவும் ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
















