குளித்தலை அருகே திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரியில் செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் அய்யர் மலை சிவாயம் பகுதியில் ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அங்கு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் வழக்கறிஞர் என 5 பேர் செய்தி சேகரிக்க சென்றனர்.
அப்போது குவாரியில் இருந்து கிளம்பி வந்த கும்பல், அவர்களை தாக்கி 2 கேமரா, ட்ரோன், செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறித்து உடைத்தனர். அத்துடன் 5 பேரையும் கடத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.
2 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உடனடியாக கரூர் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 5 பேரையும் மீட்டனர்.
படுகாயம் அடைந்த வழக்கறிஞர் திருமலை ராஜன், உதவியாளர் ராஜமாணிக்கம் ஆகிய இருவர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரிடம் காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்திய பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
















