சென்னை பட்டினப்பாக்கத்தில் திருட்டு வழக்கில் போலீசார் துன்புறுத்தியதாக கூறி, பெண் கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்டினப்பாக்கத்தை சேர்ந்த ஹசினா என்பவர், அப்பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்தார். அவர் பணிபுரிந்த வீட்டில் 8 சவரன் நகைகள் காணாமல்போனதாக உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பணிப்பெண் ஹசினாவை பிடித்து போலீசார் விசாரித்தனர். தான், நகைகளை எடுக்கவில்லை என போலீசாரிடம் அவர் கூறியுள்ளார். எனினும் நகைகளை திருடியதாக ஒப்புக்கொள்ளுமாறு அவரை போலீசார் தொடர்ந்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்த ஹசினா, ஆபத்தான நிலையில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
















