ட்ரம்ப் தொடங்கிவைத்த அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் நிறுவன உறுப்பினரானதற்கு, சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரை நிரந்தரமாக நிறுத்தவும்,போரால் சிதைந்து போன காசாவை மறுகட்டமைக்கவும், சர்ச்சைக்குரிய பாலஸ்தீனப் பகுதியில் இடைக்கால அரசை ஏற்படுத்தவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு அமைதி வாரியத்தை உருவாக்கியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது தலைமையிலான ‘அமைதி வாரியத்தை முறைப்படித் தொடங்கி வைத்தார்.’
இந்த அமைதி வாரியத்தில் இணையுமாறு 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ட்ரம்ப் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தார்.
துருக்கி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், அஜர்பைஜான்,ஹங்கேரி,பராகுவே பஹ்ரைன், மொராக்கோ, ஆப்கானிஸ்தான், அர்மீனியா, பல்கேரியா, இந்தோனேசியா, ஜோர்டான், கஜகஸ்தான், கொசோவோ, கத்தார், உஸ்பெகிஸ்தான்,மங்கோலியா உள்ளிட்ட 59 நாடுகள் ட்ரம்பின் அமைதி வாரியத்தில் சேர ஒப்புதல் அளித்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
கடந்த வாரம் டாவோஸில் நடைபெற்ற அமைதி வாரிய தொடக்கவிழாவில் வெறும் 19 நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அமைதி வாரியத்தில் சேர்வது குறித்த எந்த முடிவையும் இந்தியா அறிவிக்கவில்லை. டாவோஸில் நடந்த தொடக்கவிழாவிலும் இந்தியா கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், அமைதி வாரியத்தில் இணைந்ததற்காக,பாகிஸ்தானை ஒரு நிறுவன உறுப்பினராக வரவேற்று அமைதி வாரியத்தின் எக்ஸ் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, இது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதத்துக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவின் இரட்டை கோபுர பயங்கரவாதத் தாக்குதல் உட்பட உலகில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களின் ஊற்று பாகிஸ்தானில் இருக்கும் போது அமைதி வாரியத்தில் பாகிஸ்தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சொல்லப்போனால் இணைய உலகமே இது தொடர்பான மீம்ஸ்களால் நிரம்பி வழிகிறது. ஏராளமான மீம்ஸ்களில், பின் லேடனைக் கொண்டு வந்து அவரை வாரியத்தின் தலைவராக்குங்கள் என்று மீம்ஸ் தான் நெட்டிசன்கள் பார்வையில் முதலிடத்தில் தனித்து நிற்கிறது.
பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் ஒரு நாடு எப்படி “அமைதி வாரியத்தில்” உறுப்பினராக இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு, பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் அமைதியின் அடித்தளத்தையே அசைக்கும் நாடு என்று பதிலளித்துள்ளார் ஒருவர்.
உறுப்பினர் ஆவதற்கு 1 பில்லியன் டாலர் கட்டணம் என்ற நிலையில் பாகிஸ்தான் எப்படி உறுப்பினரானது என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாகிஸ்தானுக்கான 1 பில்லியன் டாலர் சேவைக் கட்டணத்தை யார் செலுத்துவார்கள்?” என்று ஒருவர் கேட்க மற்றொருவர்,1 பில்லியன் டாலர் நுழைவுக் கட்டணத்தைச் செலுத்திவிட்டார்களா ?” என்று ஆச்சரியத்துடன் ஒருவர் கேட்டுள்ளார்.
இன்னொருவரோ சொந்த மக்களே ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்கே போராடும் நிலையில் பாகிஸ்தான் எப்படி பணம் செலுத்தியது ? என்று ஒருவர் கேட்டுள்ளார்.
ட்ரம்பின் ‘அமைதி வாரியத்தில்’ உள்ள இரண்டாவது பெரிய பயங்கரவாத நாடு பாகிஸ்தான் என்றால் அமெரிக்கா தான் நம்பர் 1 பயங்கரவாத நாடு என்று ஒரு குறும்புக்காரர் கிண்டல் செய்துள்ளார்.
















