மூன்று முக்கிய மருந்துகளின் சேர்க்கை மூலம் பேன்கிரியாடிக் எனப்படும் கணைய புற்றுநோய் (Pancreatic Cancer) பரிசோதனையை, வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதாக ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். எலிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனை புற்றுநோய் பாதிப்பை முற்றிலுமாக அழித்துள்ள நிலையில், மனிதர்களுக்கும் இது புதிய சிகிச்சை வாய்ப்பை உருவாக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கணைய புற்றுநோய் (Pancreatic Cancer) என்பது வயிற்றில் உள்ள கணையம் பகுதியில் உருவாகும் மிக கடுமையான பாதிப்பாகும். பெரும்பாலும் தாமதமாக கண்டறியப்படும் இந்த வகை புற்றுநோய், விரைவாக பரவுவதுடன், பெரும்பாலான சிகிச்சை முறைகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது. உலகளவில் ஆண்டுக்கு சுமார் 4 முதல் 5 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு சிகிச்சை முறைகளால் இந்த நோய் குணப்படுத்தப்பட்டு வந்தாலும், அதன் பின் ஐந்து ஆண்டுகள் வரை வாழும் நோயாளிகளின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கு குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக இந்த நோய் உலகில் மிக கடுமையான புற்றுநோய்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில், ஸ்பெயினில் அமைந்துள்ள பிரபல புற்றுநோய் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில், கணைய புற்றுநோயை குணப்படுத்தும் புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னணி புற்றுநோய் நிபுணர் மரியானோ பார்பாசிட் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மூன்று மருந்துகளின் சேர்க்கை எலிகளில் பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவற்றுக்கு இருந்த புற்றுநோய் பாதிப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன், சிகிச்சை அளிக்கப்பட்டு 200 நாட்களுக்குப் பிறகும் நோய் பாதிப்பு மீண்டும் வெளிப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. “பேன்கிரியாடிக் டக்டல் அடினோகார்சினோமா” (Pancreatic ductal adenocarcinoma) இந்த புற்றுநோயின் பொதுவான வடிவமாகும். இந்த வகை புற்றுநோய்கள் பெரும்பாலும் KRAS எனப்படும் ஒரு குறைபாடுள்ள மரபணுவால் உருவாகிறது. இது புற்றுநோய் செல்களுக்கு வளரவும், பிரியவும் கட்டளையிடுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலில்தான், மரியானோ பார்பாசிட் தலைமையிலான குழு ஒரு புதிய முறையை முயற்சித்தனர். அவர்கள் பேன்கிரியாடிக் புற்றுநோயை Daraxonrasib, Afatinib மற்றும் SD36 ஆகிய மூன்று விதமான மருந்துகளால் ஒரே நேரத்தில் தாக்கினர். அப்போது Daraxonrasib என்ற மருந்து KRAS என்ற குறைபாடுள்ள மரபணுவின் தாக்கத்தை தடுத்தது. Afatinib என்ற மருந்து புற்றுநோய் செல்களில் உள்ள EGFR மற்றும் HER2 எனப்படும் முக்கிய சிக்னல் வழிகளை அடைத்தது. இந்த வழிகள் பொதுவாக செல் வளர்ச்சிக்கும் பிரிவுக்கும் உதவுகின்றன. Afatinib இந்த வழிகளை முடக்கியதால், புற்றுநோய் செல்கள் அதிகமாக வளர்வதும், பிரிவதும் தவிர்க்கப்பட்டது. அத்துடன் SD36 என்ற மருந்து புற்றுநோய் செல்களின் STAT3 பாதுகாப்பு அமைப்பை செயலிழக்கச் செய்தது. இந்த மூன்று மருந்துகளின் தாக்கமும் சேர்ந்து எலிகளில் இருந்த புற்றுநோய் பாதிப்பை முழுவதுமாக அழித்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த சிகிச்சை முறை பரிசோதிக்கப்பட்ட எலிகளின் உடலில் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல், உடல் நலனை சீராக பாதிப்புகளின்றி வைத்திருந்ததாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் மூலம் இந்த சிகிச்சை முறை மனிதர்களில் நடத்தப்படும் கிளினிக்கல் பரிசோதனைகளுக்கு உகந்ததாக இருக்கும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது புற்றுநோய் பாதிப்பின் அனைத்து வழிகளையும், ஒரே நேரத்தில் முடக்கி அழிக்கும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது. மனிதர்களில் மேற்கொள்ளப்படும் கிளினிக்கல் பரிசோதனையிலும் இதே முடிவு கிடைத்தால், அது உலகின் மிக கடுமையான புற்றுநோய்க்கு எதிரான போரில் மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
















