அமெரிக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள்,வெளிநாட்டு AI துறை சார்ந்த வல்லுனர்களைப் பணியில் அமர்த்த தீவிரம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் H-1B விசாவுக்கான ட்ரம்பின் கடுமையான நடவடிக்கைகள், அமெரிக்காவின் AI துறைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த H-1B விசா கட்டுப்பாடுகள் காரணமாக, 2025 நிதியாண்டில் இந்தியாவின் முக்கிய ஐடி நிறுவனங்கள் வெறும் 4,573 H-1B அனுமதிகளை மட்டுமே பெற்றுள்ளன. இது 2015 ஆம் ஆண்டு கிடைத்த H-1B விசா-க்களில் 70 சதவீதம் குறைவு என்பதும், கடந்த ஆண்டை விட 37 சதவீதம் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், 2025 நிதியாண்டில் புதிய வேலைவாய்ப்புக்கான அங்கீகரிக்கப்பட்ட H-1B மனுக்களைக் கொண்ட முதல் 25 நிறுவனங்களின் பட்டியலில் மூன்று இந்திய நிறுவனங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன.
IT துறைகளுக்கான முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் AI துறையில் அதிக கவனம் காட்டிவரும் நிலையில், AI தொழில் நுட்பத் திறன் உள்ளவர்களுக்கே H-1B விசா தேவை அதிகரித்துள்ளது.
தேசிய அமெரிக்க கொள்கை அறக்கட்டளையின் அமெரிக்க குடியேற்றத் தரவுகளின்படி, 2025 நிதியாண்டில் அமேசான், மெட்டா, கூகிள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில், புதிய H-1B பணிகளுக்கான labour condition எனப்படும் தொழிலாளர் நிபந்தனை விண்ணப்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவை AI தொடர்பானவை ஆகும்.
ஏற்கெனவே H-1B விசாக்கள் மீதான அமெரிக்க அரசின் கடும் நடவடிக்கை காரணமாக, விசா புதுப்பித்தல் நேர்காணல்கள் 2027ம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், உலக அளவில் AI துறையில் முதன்மை நாடாக வேண்டும் என்ற அமெரிக்காவின் நோக்கத்தை அதிபர் ட்ரம்பின் H-1B விசா கட்டுப்பாடுகள் தடுத்துவிடும் என்று கூறப்படுகிறது.
2025-ல் AI துறையில் அமேசான், மெட்டா பிளாட்ஃபார்ம்கள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் அதிக அங்கீகரிக்கப்பட்ட புதிய H-1B மனுக்களைக் கொண்டிருந்தன.
AI செலவு மற்றும் பரந்த மூலதனச் செலவினத் திட்டங்களை பூர்த்தி செய்ய நிறுவனங்கள் வெளிநாட்டு திறமையாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன.
மேலும் இந்நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்கள் மூலதனச் செலவினங்கள் 380 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டும் என்று கணித்துள்ளன. குறிப்பாக, கூகுள் 185 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலும், மெட்டா 300 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகவும் மூலதன செலவுகளை கூட்ட திட்டமிட்டுள்ளன.
அமெரிக்க குடியேற்ற ஊதிய விதிகளின்படி, நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க H-1B தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் கடுமையாக போராடுகின்றன. AI முதலீடுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளதாக அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில்,அமெரிக்க அரசின் புதிய குடியேற்ற கட்டுப்பாடுகள், AI துறையில் வெளிநாட்டுத் திறமையானவர்களைப் பணியமர்த்துவதில் பெரும் தடையை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால் AI துறை வளர்ச்சியில் அமெரிக்கா பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையில் ட்ரம்பின் நடவடிக்கையால் AI துறையில் சீனாவுக்கு எதிராக அமெரிக்க ஆதிக்கம் செலுத்துமா ? என்பதே கேள்விக்குறியாக உள்ளது
















