வங்கதேசத்தில் 13வது பொது தேர்தல் மட்டும் நடைபெறவில்லை. ஜூலை தேசிய சாசனம் குறித்த பொது வாக்கெடுப்பும் நடந்தது. பொது வாக்கெடுப்பில் ஜூலை தேசிய சாசனத்துக்கு ஆதரவாக 70 சதவீத வங்கதேச மக்கள் வாக்களித்துள்ளனர். வங்கதேசத்தின் மறுமலர்ச்சி என்று கூறப்படும் இந்த ஜூலை தேசிய சாசனம் குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
வங்கதேசத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துவது ஒன்றும் புதிதல்ல. 2011 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற ஷேக் ஹசீனா, பொது வாக்கெடுப்பு முறையை சட்ட ரீதியாக ரத்து செய்தார்.
அதற்கு முன்னதாக, வங்கதேசத்தில் மூன்று முறை பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
1977 மற்றும் 1985ம் ஆண்டு நடத்தப்பட்ட இரண்டு பொது வாக்கெடுப்புகளில் அப்போதைய அதிபர்கள், அவர்களின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்ற கேள்வி மட்டுமே கேட்கப்பட்டது.
1991-ல் நடந்த மூன்றாவது பொது வாக்கெடுப்பில், அதிபர் முறையிலிருந்து நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நாடு திரும்ப வேண்டுமா என்ற கேள்வி மட்டுமே கேட்கப்பட்டது.
இந்த மூன்று பொது வாக்கெடுப்புகளிலும் பெரும்பான்மையான வங்கதேச மக்கள் ஆம் என்றே வாக்களித்திருந்தனர்.
2024ம் ஆண்டு ஜூலை மாதம் இட ஒதுக்கீடு காரணமாக தொடங்கிய மாணவர்கள் போராட்டம் ஒருகட்டத்தில் அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியதால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதும், அந்நாட்டு உயர்நீதிமன்றம் பொது வாக்கெடுப்பு முறைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது.
இதற்கிடையே, மாணவர்கள் போராட்டத்தை முன்னின்று நடத்திய அமைப்பினர், ஜூலை சாசனம் என்ற பெயரில் புதிய வங்கதேச நிர்வாக சீர்த்திருத்த வரைபடத்தை உருவாக்கினார்கள்.
கடந்த நவம்பர் மாதம் ஜூலை சாசனத்தை அமல்படுத்தும் உத்தரவை முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அங்கீகரித்தது.
அரசியலமைப்பு மற்றும் அரசியல் சீர்திருத்தம், தேர்தல் சீர்திருத்தம், நீதித்துறை மற்றும் நிறுவன சுதந்திரம் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டு ஜூலை தேசிய சாசனம் உருவாக்கப் பட்டுள்ளது.
வங்கதேசத்தின் ஆட்சி நிர்வாகத்தை முற்றிலும் மாற்றியமைப்பதற்கான ஜூலை சாசனத்தில் நாட்டின் தேசிய கட்டமைப்பை சீரமைப்பதற்கான 84 சீர்திருத்த முன்மொழிவுகளில் 47-க்கு அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும் நிலையில், மீதமுள்ள 37 சீர்திருத்தங்களும் சட்டங்கள் அல்லது நிர்வாக உத்தரவுகள் மூலம் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த சாசனத்தின் படி நீண்ட காலமாக ஒரே பிரதமர் நாட்டை ஆள்வதைத் தடுக்கும் விதமாக இனி ஒருவர் இரண்டு முறை மட்டுமே பிரதமர் ஆக முடியும். புதிதாக 100 மேல் சபை இடங்கள் உருவாக்கப் பட்டு அவை தேசிய வாக்குகளின் பங்கைப் பொறுத்து அனைத்து கட்சிகளுக்கும் பிரித்துக்கொடுக்கப்படும். அதிபரின் அதிகார வரம்பை அதிகரித்து பிரதமரிடம் ஒட்டுமொத்த அதிகாரமும் இருப்பது தடுக்கப்படும்.
எதிர்க்கட்சிகளுக்கு உரிய அதிகாரம் கொடுக்கும் வகையில் துணை சபாநாயகர் பதவி, அவர்களுக்கு வழங்கப்படும். நாடாளுமன்றத்தில் அதிக அளவில் பெண்களின் பிரதிநிதித்துவம் இருப்பதும் உறுதி செய்யப்படும். நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அரசு அமைப்புகளில் அரசியல் தலையீடு தடுக்க வழிவகை செய்யப்படும்.
குறிப்பாக “ஜூலை போராளிகள்” என்று அழைக்கப்படும் மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதையும் இந்த சாசனம் உறுதிபடுத்துகிறது.
ஜூலை தேசிய சாசனத்துக்கான பொது வாக்கெடுப்பில் 60.26 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர், இதில் ஜூலை சாசனத்துக்கு ஆதரவாக 4,80,74,429 வாக்குகளும் எதிராக 2,25,65,627 வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையத்தின் மூத்த செயலாளர் அக்தர் அகமது தெரிவித்துள்ளார்.
அதாவது சுமார் 70 சதவீத வங்கதேச மக்கள் இந்த ஜூலை சாசனத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே அரசியலமைப்பு சீர்திருத்த கவுன்சில் இந்த சீர்திருத்தங்களை இன்னும் 270 வேலை நாட்களுக்குள் செயல்படுத்தும், என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சீர்திருத்தங்களைத் தனித்தனியாகத் தீர்மானிக்கும் வாய்ப்பு வாக்காளர்களுக்கு மறுக்கப் பட்டுள்ளது என்றும் அதற்குப் பதிலாக, ஆம்-அல்லது-இல்லை என ஒற்றை பதிலைத் தேர்ந்தெடுக்க கட்டாயப்படுத்தப் பட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
















