அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஈரான் இழுபறியை கடைபிடிப்பதால், மேற்கு ஆசியாவில் அமெரிக்கா முழுமையான போருக்கான ராணுவ தளவாடங்களை பெருமளவு குவித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த முறை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரானுக்கு அது மோசமான நாளாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார்.
ஈரானை அச்சுறுத்தும் வகையில் இரு விமானம் தாங்கி போர் கப்பல்களையும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் டிரம்ப் நிறுத்தியுள்ளார். போர்க்கப்பல் ஆபத்தானதுதான், ஆனால் அதை கடலுக்குள் மூழ்கடிக்கும் ஆயுதம் தங்களிடம் உள்ளதென ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்கா கடந்த 24 மணி நேரத்தில் 50க்கும் மேற்பட்ட நவீன போர் விமானங்களை மேற்காசியா நோக்கி அனுப்பி வைத்துள்ளது. இதற்கிடையே ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணை, அந்நாட்டு ராணுவத்தின் போர் பயிற்சிக்காக தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் எந்நேரமும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் சூழல் உருவாகியுள்ளது.
















