போலி தடையில்லா சான்று வழங்கி சென்னையில் 72 பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட்டது தொடர்பான மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல் பங்க் அமைக்க காவல்துறை தரப்பில் இருந்து தடையில்லா சான்று பெறவேண்டும் எனக்கோரி வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெட்ரோல் பங்க்குகள் அமைக்க போலியாக தடையில்லா சான்று பெற்று மோசடி செய்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் முழுமையாக விசாரிக்கவில்லை என்றும், சென்னையில் மட்டுமே 72-க்கும் மேற்பட்ட மோசடிகள் நடந்துள்ளதாக மனுதாரர் ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாகவும் கூறிய நீதிபதிகள்,
சென்னையில் உள்ள வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டனர்.
திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் குற்றத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதால், அந்த இடங்களில் நடந்த மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசாரே விசாரணை நடத்தலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















