சென்னையில் அரசின் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி அமைச்சர்கள் முன்னிலையில், மாநிலக் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் சென்னை மாநில கல்லூரியில் அமைந்துள்ள அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சாமிநாதன், தங்கம் தென்னரசு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், மாநிலக் கல்லூரியில் பயிலும் முதுகலை முதலாமாண்டு மாணவர்கள் சிலர், தங்களுக்கு அரசின் மடிக்கணினி வழங்கப்படவில்லை என்றுகூறி
கல்லூரி நுழைவாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்தபோது, மாணவர்கள் தர்ணாவில் ஈடுபடுவதைப் பார்த்தும், அவர்கள் என்ன காரணத்திற்காக அமர்ந்திருக்கிறார்கள் என்றுகூட விசாரிக்காமல் சென்றது, அங்கிருந்த மாணவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
















