இலவசங்களுக்கு எந்த வகையில் நிதி கிடைக்கிறது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்றது.
அப்போது இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, இலவசங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், தொடர்ந்து இலவசங்களை வழங்குவதால் மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையில் உள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.
மானியமும், ஊதியம் வழங்குகிறீர்கள், இதைத் தவிர எந்த அரசும், எதுவும் செய்யவில்லை எனவும், 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கான நிதி, எந்த வகையில் கிடைக்கிறது என்றும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள் அமர்வு, பெரும்பாலான இந்திய மாநிலங்கள் ஏற்கனவே வருவாய் பற்றாக்குறையில் உள்ளதாகவும், ஆனால் நீண்ட கால வளர்ச்சி முன்னுரிமைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பெரிய அளவிலான இலவசங்களை தொடர்ந்து அறிவித்து வருவதாகவும் கூறினார்.
இலவசங்கள் வழங்குவதை விட வேலை வாய்ப்பு, நிலையான வளர்ச்சி வழிகளை உருவாக்குவதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் கூறி வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
















