பத்ம விருது பெற்றவர்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்கியதுடன், கடின உழைப்பு மற்றும் தன்னலமற்ற சேவையை நாட்டிற்கு வழங்கியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டி உள்ளார்.
பத்ம விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த பிரபலங்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. பத்ம பூஷண் விருது பெற்ற எஸ்.கே.எம். மயிலானந்தன் மற்றும் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, பத்மஸ்ரீ விருது பெற்ற வி. காமகோடி, சிவசங்கரி, ஹெச்.வி. ஹண்டே, ரஞ்சனி மற்றும் காயத்ரி, புண்ணியமூர்த்தி நடேசன், திருவாரூர் பக்தவத்சலம், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், கே. ராமசாமி, ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் மற்றும் ஆர். கிருஷ்ணன் ஆகியோருக்கு சால்வை அணித்து ஆளுநர் கவுரவித்தார்
அதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர் ரவி, பாரத நாட்டிற்காக தொண்டாற்றும் மகன்களையும், மகள்களையும் நாம் அடையாளம் காண வேண்டும் என்றும், பத்ம விருதாளர்கள் அரசின் அங்கமாக இல்லாவிட்டாலும், மிகச் சிறந்த காரியங்களைச் செய்திருக்கிறார்கள் என்றும் பாராட்டினார்.
சாதாரணமாக மக்கள் தங்கள் வாழ்க்கையை தேடிக் கொள்வார்கள் என்றும், சிலர் இந்த தேசத்தையும் சமூகத்தையும் செழுமைப்படுத்த அசாத்தியமான பங்களிப்பை வழங்குகிறார்கள் என்றும் குறிப்பிட்ட ஆளுநர், அவர்களுக்கு நன்றி சொல்லவே இந்த மேடை என்று பெருமிதம் தெரிவித்தார்.
















