திடக்கழிவு மேலாண்மை விதிகளை ஏப்ரல் ஒன்று முதல் நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கழிவுகள் மேலாண்மை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழக்குகள் தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கழிவுகளை ஈரமான குப்பை, உலர்ந்த குப்பை, சுகாதார கழிவுகள் மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் கழிவுகள் என 4 வகைகளாக பிரித்து வழங்க வேண்டும் எனவும், குப்பைகளைச் சேகரிக்க 4 தனித்தனி அறைகளைக் கொண்ட பிரத்யேக வாகனங்களை உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
குப்பைகளை தரம் பிரிப்பதை உறுதி செய்யும் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக மேயர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் செயல்பட வேண்டும் எனவும், கழிவு மேலாண்மை பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து தலைமைச் செயலாளருக்கு அறிக்கை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விதிகளை பின்பற்ற தவறும் அதிகாரிகள் மீது சுற்றுச்சூழல் சட்டங்களின் கீழ் குற்றவியல் விசாரணை மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
ஏப்ரல் ஒன்று முதல் இந்த விதிகள் முழு வீச்சில் அமலுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்,’இப்போதே செய் அல்லது எப்போதும் முடியாது’ என்ற வேகத்தில் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினர்.
















