ஒடிசா லஞ்ச ஒழிப்புத்துறை வரலாற்றில் இல்லாத அளவாக அரசு அதிகாரி வீட்டில் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவின் கட்டாக் நகரில் சுரங்கத் துறை துணை இயக்குநராக ஸ்ரீ தேபப்ரதா மொஹந்தி பணியாற்றி வருகிறார் . இவர் உரிமம் பெற்ற நிலக்கரி விற்பனையாளர் ஒருவரிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.
இதனைத் தொடர்ந்து புவனேஸ்வரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு, பத்ரக், மாதாசாஹியில் உள்ள அவரது பூர்வீக இல்லம் மற்றும் கட்டாக்கில் உள்ள அவரது அலுலவக அறை ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
புவனேஸ்வரில் உள்ள அவரது குடியிருப்பில் சோதனை நடத்திய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அங்குள்ள டிராலி பைகள் மற்றும் அலமாரிகளுக்குள் கட்டுக்கட்டாகப் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட தொகையின் சரியான மதிப்பைக் கணக்கிட, பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு எண்ணப்பட்டது. முதற்கட்டமாக 4 கோடி ரூபாய்கும் அதிகமாக பணம் கண்டறியப்பட்டுள்ளது.
ஒடிசா லஞ்ச ஒழிப்புத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்குப் பிடிபட்ட மிகப்பெரிய ரொக்கப் பறிமுதல் இதுவாகும் எனத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
















