நியூயார்க் நகரில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின் போது, காவல்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் பனிப்பந்துகளை வீசித் தாக்கினர்.
இந்த சம்பவம், தற்போது மேயர் ஜொஹ்ரான் மம்தானிக்கும் நியூயார்க் காவல்துறைக்கும் இடையிலான ஒரு பெரிய அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை மான்ஹாட்டனில் உள்ள வாஷிங்டன் ஸ்கொயர் பூங்காவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பனிக்கட்டிகளை கொண்டு விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மீது இளைஞர்கள் பனிப்பந்துகளை சரமாரியாக வீசினர். இதில் இரண்டு அதிகாரிகள் காயமடைந்ததோடு, காவல்துறையின் வாகனங்களும் சேதமடைந்தன.
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் மம்தானி, இளைஞர்களுக்கு இடையிலான ஒரு சாதாரண பனிப்பந்து விளையாட்டு கைமீறிப் போனதாகவே கருதுகிறேன் என்று கூறினார். மேயரின் இந்த மென்மையான அணுகுமுறை காவல்துறை வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காவல்துறை நலச் சங்கத்தின் தலைவர் பேட்ரிக் ஹென்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஒரு விளையாட்டு அல்ல, ஒரு திட்டமிட்ட கொடூரமான தாக்குதல் என்றும், மேயரின் இத்தகைய பதில், அவரது தலைமைத்துவத்தின் தோல்வியைக் காட்டுவதாகவும் கூறியுள்ளார். சீருடையில் இருக்கும் அதிகாரிகள் மீதான வன்முறையை அவர் குறைத்து மதிப்பிடுவது கண்டிக்கத்தக்கது என்று சாடியுள்ளார்.
















