முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணியில் இணைந்திருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும், எந்த கருத்துக்களை மக்களிடையே எடுத்து செல்ல வேண்டும் என்ற கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்ததால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். மத்தியில் சிறந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கும் போதுஅரசின் திட்டங்களை எடுத்து சென்றாலே போதும் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் சரத்குமார் கூறினார்.
















