நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அதிக காலம் எடுத்துக் கொள்ளும் அதிகாரிகள், எதிர்தரப்பினருக்கு உடந்தையாக செயல்படுகிறார்களா என விசாரிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை முகப்பேரில் சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட 27 சென்ட் நிலத்துக்கு உரிய இழப்பீடு கோரி தனியார் பள்ளி தரப்பில் தாக்கல் செய்த வழக்கில்,
பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் சாலை அமைக்கப்பட்டது தெரியவந்தால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 2021 ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து நான்கு ஆண்டுகள் காலதாமதமாக, அரசுத்தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு,
அரசின் கோப்புகளை கையாளும் அதிகாரிகள் சோம்பேறித்தனமாக உள்ளதாகவும்,
இவ்வாறு செயலற்ற தன்மையுடன் நடந்துள்ளதால், தாமதத்தை மன்னிக்க எந்த காரணமும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், பல மேல்முறையீட்டு வழக்குகள், நொண்டி சாக்குகளை கூறி, அதிக கால தாமதத்துக்கு பின் தாக்கல் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்த நீதிபதிகள்,
இதற்கு அதிகாரிகளின் அலட்சியம் அல்லது எதிர்தரப்பினருக்கு உடந்தையாக செயல்படுவதே காரணம் என சுட்டிக்காட்டினர்.
இதுபோன்று தாமதமாக மேல்முறையீடு செய்வதில் அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் செயல்படுகிறார்களா?
எதிர்தரப்பினருக்கு உடந்தையாக செயல்படுகிறார்களா? என லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ரகசியமாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















