நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், அதன் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்ற அடிப்படை அறிவு சட்ட அமைச்சருக்கு இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது என நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத அமைச்சர் ரகுபதியை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்க கோரி பரமசிவம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அமைச்சர் ரகுபதியின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், மலை உச்சியில் விளக்கு ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை அனுமதிக்க முடியாது என்று கூற அமைச்சருக்கு மட்டும் அல்ல, வேறு யாருக்கும் துணிச்சல் கிடையாது எனவும் கூறினார்.
பொது வெளியில் நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவிக்க முடியாது எனக்கூறிய நீதிபதி, நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் அதன் இறுதி தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததும் அதன் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என குறிப்பிட்ட நீதிபதி, சட்ட அமைச்சர் போன்ற உயர் பதவியை வகிக்கும் ஒருவருக்கு இந்த அடிப்படை அறிவு இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது என கூறினார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசியலுக்காக திசை திருப்ப அமைச்சர் ரகுபதி விஷமத்தனம் செய்துள்ளார் எனக்கூறியுள்ள நீதிபதி, அமைச்சரின் கருத்தை மாவட்ட ஆட்சியர் நிராகரித்திருப்பதை கருத்தில் கொண்டு அமைச்சருக்கு எதிரான இடையீட்டு மனுவை முடிக்க நினைக்கிறேன் என தெரிவித்தார்.
மேலும், தேவைப்பட்டால் இடையீட்டு மனுவை மீண்டும் விசாரிக்க தயங்கமாட்டேன் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
















